Senthil Balaji vs ED: ’செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை!’ அமலாக்கத்துறை பதில்!
Mar 04, 2024, 03:53 PM IST
”சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததற்கான ஆதரங்கள் உள்ளதை நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டி உள்ளன என்பதால் தன்னை விடுவிக்க கோரும் செந்தில் பாலாஜியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை வாதம்”
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யவில்லை என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும், பின்னர் உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது. இதுவரை 23 ஆவது முறையாக செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை துணை இயக்குநர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதியவில்லை, சட்டப்படிதான் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோசடி குற்றச்சாட்டுக்களில் செந்தில் பாலாஜியின் பங்கு இருந்தது பல நீதிமன்றங்கள் தெளிவுப்படுத்தி உள்ளதாகவும், வழக்கில் முழுமையான சாட்சியங்களை பதிவு செய்தால் மட்டுமே அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை விசாரணை நீதிமன்றத்தால் மதிப்பீடு செய்ய முடியும். சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததற்கான ஆதரங்கள் உள்ளதை நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டி உள்ளன என்பதால் தன்னை விடுவிக்க கோரும் செந்தில் பாலாஜியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை வழக்கை 3 மாதத்தில் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணையை நீதிபதி அல்லி நாளை மறுதினம் ஒத்தி வைத்தார்.