Ponmudy: 'அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை' உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Dec 21, 2023, 11:15 AM IST
தமிழக உயர் கல்வி அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் தனது அமைச்சர் பதவியை இழந்துள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக உயர் கல்வி அமைச்சர் பொன்முடிமற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இருவருக்கும் தலா 50 லட்சம் அபராதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1 மாத காலம் தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்துள்ளார். இதனால் பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழக்கிறார்.
2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது உயர்கல்வி மற்றும் கனிம வள அமைச்சராக பொன்முடி இருந்தார். பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் செப்டம்பரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2006 ஏப்ரல் 13 முதல் 2010 மே 13 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக கூறப்பட்டது. இது வருமானத்தை விட 65.99 சதவிகிதம் அதிகம் ஆகும்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. இதில் 2006 ஏப்ரல் 13 முதல் 2011 மே 14 வரையிலான காலமாக மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் 2016 ஏப்ரலில் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 2017ல் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். இந்த மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் டிசம்பர் 19ஆம் தேதி தீர்ப்பளித்தார். அதில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படுவதால் பொன்முடியும் அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இதைத்தொடர்ந்து பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இருவருக்கும் தலா 50 லட்சம் அபராதம் வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தண்டனை 1 மாத காலம் நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்துள்ளார். இதனால் பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழக்கிறார்.
இந்நிலையில் தண்டனையை குறைக்க பொன்முடியின் மனைவி விசாலாட்சி கோரிக்கை விடுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அறிவுறுத்தி உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9