Erode by-Election : ஈரோடு இடைத்தேர்தல்.. அதிமுக டெபாசிட் இழக்கும் - கே.என் நேரு!
Feb 27, 2023, 10:17 AM IST
Minister KN Nehru : ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா அண்மையில் காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம்.
ஜனவரி 31-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, கடந்த 7ஆம் தேதி நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்து வேட்பாளர் பட்டியலும் பட்டியல் வெளியானது. மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் கட்சியான திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், எதிர்கட்சியான அ.தி.மு.க கூட்டணியின் வேட்பாளர் தென்னரசும் பிரதான வேட்பாளராக உள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் உள்ளிட்டோரும் களத்தில் உள்ளனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மேனகா, ஆனந்த் ஆகியோர் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
238 வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இன்று காலை 9 மணி நிலவரப்படி 10.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் தாக்கர் ரோடு பகுதியில் 10 ஆவது வார்டு வள்ளுவர் தெரு மற்றும் செல்வ முத்து மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணற்றுடன் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பஞ்சவர்ணசாமி கோயில் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என் நேரு, “ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, முதல்வர் கூறியது போல அதிமுக டெபாசிட் இழக்கும். தோல்வி பயத்தில் அதிமுக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.
காவிரி பாலத்தில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது, 3ம் தேதிக்குள் காவேரி பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும். பாதாள சாக்கடை திட்ட பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெறுகிறது. மக்கள் சிரமங்களை பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.