Minister I Periyasamy: திண்டுக்கல்லில் பேனர் வைக்ககூடாது…அமைச்சர் அதிரடி உத்தரவு
Jan 06, 2023, 11:56 PM IST
கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்ககூடாது எனவும், ஏற்கனவே வைக்கப்பட்ட பேனர்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு திமுக துணை பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கட்சியினருக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் ஐ. பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன் பிறப்புகள் அனைவரும் கட்சி நிகழ்ச்சிகள் எக்காரணம் கொண்டும் பேனர்கள் வைக்ககூடாது. கட்சி கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அவ்வாறு கழக உடன்பிறப்புகள் பேனர்கள் எங்காவது வைக்கப்பட்டிருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் உடனே தங்களது பேனர்களை அப்புறபடுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகளின் பேனர்கள் கீழே விழுந்தும், அதனால் பாதிப்பு ஏற்பட்டும் தமிழகத்தில் பல்வேறு உயிர் பலிகள் நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற சமயங்களில் பேனருக்கு எதிராக பல்வேறு கட்சிகள் குரல் எழுப்பினாலும், பின்னர் தங்களது கட்சி சார்ந்த நிகழ்வுக்காக மீண்டும் பேனர் வைக்கும் போக்கை தவறாமல் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் பேனர் வைக்கும் கலாச்சாரத்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் மூத்த அரசியல்வாதிகளும் குரல் கொடுப்பதோடு, அவ்வப்போது கட்சி தொண்டர்களிடம் தவறாமல் அறிவுறுத்தி வருகிறார்கள்.
கடந்த ஆண்டில் திமுக அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, பேனர் வைக்கும் கலாச்சாரத்தை திமுகவினர் முற்றிலும் கைவிட வேண்டும். பேனர் வைக்கக்கூடாது என்ற அறிவுறுத்தலை மீறுவோர் யாராக இருந்தாலும் தலைமைக் கழகத்தின் நடவடிக்கை பாயும் என எச்சரித்தார்.
ஆனாலும் இந்த பேனர் கலாச்சாரமானது குறையவில்லை. இதுதொடர்ந்து கொண்டேதான் இருந்து வருகிறது. குறிப்பாக அமைச்சர்கள் வரவேற்பு முதல் பல்வேறு விதமான அறிப்புகள், சாதனை குறிப்புகள் வரை பேனர் வைத்து விளம்பரப்படுத்தப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பேனர் வைப்பதை தவிர்க்கும் விதமாக கட்சி தொண்டர்களுக்கு அந்த மாவட்டத்தை சேர்ந்தவரான அமைச்சர் ஐ. பெரியசாமி உத்தரவிட்டுள்ளார்.
டாபிக்ஸ்