சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்..கதறும் உரிமையாளர் - அமைச்சர் சொன்ன விளக்கம் இதோ!
Dec 15, 2023, 05:59 PM IST
Salem Modern Theatre: சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முன் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளாா்.
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஏற்காடு பிரதான சாலையில் 1935-ல் மாடர்ன் தியேட்டர் ஏற்படுத்தப்பட்டது. இங்கு 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் கருணாநிதிக்கு மாடர்ன் தியேட்டர் திருப்புமுனையாக அமைந்தது. அதன் வளாகம் தற்போது குடியிருப்புகளாக மாறிய நிலையில், மாடர்ன் தியேட்டர் நினைவு வளைவு மட்டும் தற்போது உள்ளது.
இதனிடையே, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயில் வளைவை கேட்டு மாவட்ட ஆட்சியர் மிரட்டுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மாடர்ன் தியேட்டர் நில உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முதல்வரின் விருப்பம் எனக் கூறி வளைவு முன் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க அந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கேட்டார். நான் குடும்பத்தினரிடம் பேசி தெரிவிப்பதாக கூறி வந்தேன். இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தொந்தரவுகளை கொடுக்கிறது.
கடந்த 1ஆம் தேதி ஏற்காடு பிரதான சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதாக கூறி பிரச்னைக்குரிய பகுதியில் அளவீடு செய்வது போல், எங்களுக்கு சொந்தமான இடத்தில் கல் நட்டு பேனர் வைத்துள்ளனர். எங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. நியாயமாக இந்த இடத்தில் மாடர்ன் தியேட்டர்ஸை உருவாக்கிய டி.ஆர்.சுந்தரம் சிலை தான் வைக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முன் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளாா். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலத்தில் முன்பு செயல்பட்டு வந்த மாடர்ன் தியேட்டர்ஸின் நுழைவாயிலில் சிலை அமைப்பதற்காக, அந்த இடத்தை கேட்டு, அரசின் சார்பில் நிர்ப்பந்திக்கப்படுவதாக பத்திரிக்கையில் செய்திகள் வந்துள்ளன. இந்த நிறுவனம் செயல்பட்டு வந்த 8.9 ஏக்கர் நிலமானது, தற்போது, மனைகளாகவும், வணிகப் பகுதியாகவும் மாற்றப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பகுதியின் நுழைவாயில் வளைவு சேலம் - ஏற்காடு நெடுஞ்சாலையில் கன்னங்குறிச்சி கிராமத்தின் சர்வே எண்.8இல் உள்ளது.
இந்த சாலையை விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதால், நெடுஞ்சாலைத்துறை நிலங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களால், 2.12.2023 அன்று, அளவீடு நடத்தப்பட்டுள்ளது. இந்த அளவீட்டின் போது, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு முழுமையாக, நெடுஞ்சாலைத்துறை நிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அரசின் நிலவரை படத்தில் உள்ளவாறு, எல்லைகளை வரையறுப்பதற்காக, நெடுஞ்சாலையினுடைய எல்லையில் எந்த சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு, எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன.
மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத்துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பழமையான இந்த நுழைவாயில் வளைவைப் பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்ற அடிப்படையில், இந்தப் பகுதியில், வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கோ, சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. எனவே, இந்த நெடுஞ்சாலைத்துறை இடம் தவிர, வேறு இடத்தைக் கேட்டு அரசுத்தரப்பில் நிர்ப்பந்திப்பதாக வெளிவரக்கூடிய தகவல்கள் அனைத்தும் தவறானவை என தெளிவுபடுத்தப்படுகிறது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்