TN Assembly: ‘அத்திக்கடவு-அவிநாசி திட்டம் எப்போது நிறைவேறும்?’ செங்கோட்டையன் கேள்விக்கு துரைமுருகன் நச் பதில்!
Oct 09, 2023, 10:49 AM IST
“திட்டத்திற்கு காளிங்கராயன் அணையில் இருந்து 1.5 டிஎம்சி தண்ணீரை பம்ப் செய்து கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இப்போது தண்ணீர் இல்லை”
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி, முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் மறைந்த எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருக்கு பேரவையில் இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அப்போது அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் தொடங்கிய கேள்வி நேரத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன், “முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையில் இருந்தபோது அத்திக்கடவு அவிநாசி திட்டம் 60 ஆண்டுகால விவசாயிகள் கனவுகளை நிறைவேற்றும் வகையில் 1652 கோடி நிதி ஒதுக்கி 80 சதவீத பணிகள் முடிவந்துவிட்டது. எப்போது அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்பதை அறிய விரும்புகிறேன்” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை துவக்கும் அளவுக்கு எல்லா திட்டங்களும் முடிவடைந்துள்ளன. ஆனால் அந்த திட்டத்திற்கு காளிங்கராயன் அணையில் இருந்து 1.5 டிஎம்சி தண்ணீரை பம்ப் செய்து கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இப்போது தண்ணீர் இல்லை; ஆகையால் காளிங்கராயன் அணையில் தண்ணீர் வந்தவுடன் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைப்பார்கள்” என தெரிவித்தார்.