MHC: குண்டர் தடுப்பு சட்டம் கருவியாக செயல்படுத்துவதாக நீதிபதிகள் கருத்து
Dec 20, 2022, 02:25 PM IST
குண்டர் தடுப்பு சட்டத்தை கருவியாக செல்படுத்தி, முறையாக விசாரணை செய்யாமலும், விதிகளை மனதில் கொள்ளாமலும், தொடர் குற்றத்தில் ஈடுபடுவதாக ஐந்து பேர் மீது இந்த சட்டத்தை பயன்படுத்தி உள்ளனர். எனவே அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், ராஜ்குமார் ராஜேஷ்வரன், கருணாகுமார், ரஞ்சித் ஆகியோர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து இவர்கள் தொடர் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக கூறி, காவல்துறையினர் இந்த ஐந்து பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதற்கான உத்தரவை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார். இதன் அடிப்படையில் ஐந்து பேரும் மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து மேற்கூறப்பட்டிருக்கும் ஐந்து பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவர்களின் தாய், மனைவி தரப்பிலிருந்து உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐந்து நபர்கள் மீது காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் ஒருவரை தவிர மற்ற நபர்கள் மீது வேறு வழக்குகள் ஏதும் இல்லை. இதனை அரசு தரப்பு வழக்கறிஞரும் உறுதி செய்துள்ளார்.
ஆனால் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் இந்த ஐந்து பேரும் தொடர் குற்றத்தில் ஈடுபடுவதுபோல் குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி உள்ளனர். அந்த வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தை கருவியாக பயன்படுத்தி உள்ளது தெளிவாக தெரிகிறது.
காவல்துறையினர் இந்த வழக்கை பொறுத்தவரை முறையாக விசாரணை செய்யாமலும் குண்டர் தடுப்பு காவல் விதிகளை மனதில் கொள்ளாமலும், இந்த சட்டத்தை பயன்படுத்தி உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இந்த ஐந்து பேர் மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
டாபிக்ஸ்