Weather Update: மக்களே உஷார்..14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. தீவிர வெப்ப அலை வீசுமாம் - முழு விபரம் இதோ!
Apr 25, 2024, 03:19 PM IST
TN Weather Update: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிர வெப்ப அலை
முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவதாக இந்திய வானிலை மையத்தின் தலைவர் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம் என்றும் தமிழகத்தின் தற்போதைய நிலைக்கு "Hot and humidity weather" என பெயரிட்டுள்ளோம்." எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்பெல்லாம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருந்தால் அசவுகரியம் இருக்காது. ஆனால், தற்போது 35 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வெப்பநிலை உணரப்பட காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதே காரணம் என்றும் மொஹபத்ரா குறிப்பிட்டுள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஏப்ரல் 25) முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 - 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் பிற்பகலில் 30 - 50%ஆகவும், மற்ற நேரங்களில் 40 - 75%ஆகவும் இருக்கக்கூடும் அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
தென் தமிழக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
14 இடங்களில் வெயில் சதம்
நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக ஈரோடு, வேலூர் ஆகிய இடங்களில் தலா 107 டிகிரி, திருப்பத்தூர், சேலம், கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் தலா 106 டிகிரி, தருமபுரி, திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களில் தலா 105 டிகிரி, மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரி, கோவை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி, சென்னை விமான நிலையம், மதுரை மாநகரம் ஆகிய இடங்களில் தலா 101 டிகிரி, பாளையங்கோட்டையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்