Udhayanidhi: ‘காங்கிரஸ் தோல்விக்கு உதயநிதிதான் காரணமா!’ தெறிக்கவிடும் மீம்ஸ்கள்!
Dec 03, 2023, 04:29 PM IST
”3 மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோற்ற நிலையில் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து மீம்ஸ்கள் போடப்பட்டு வருகிறது”
5 மாநிலத் தேர்தல்கள் கடந்த நவம்பர் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்த நிலையில், 4 மாநிலத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் 54 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் வெறும் 33 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் 161 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 67 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், ஒரு இடத்தில் பிஎஸ்பி கட்சியும் முன்னிலையில் உள்ளனர்.
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 199 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 115 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. 69 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் 64 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. பிஆர்எஸ் கட்சி 40 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 8 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ள நிலையில், சனாதன தர்மத்தை சுட்டிக்காட்டி விமர்சனங்கள் எழுந்துள்ளது. "சனாதன தர்மத்தை காங்கிரஸ் கட்சி தலைவர் எதிர்ப்பதால் காங்கிரஸ் தோல்வியின் விளிம்பில் உள்ளது. மகாத்மா காந்தியின் வழியில் சென்ற காங்கிரஸ் கட்சியை மார்க்ஸ் வழியில் கொண்டு செல்லும் முயற்சியின் விளைவு இது. சனாதன தர்மத்தை எதிர்த்ததால் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. சாதிவாரி அரசியலை நாடு ஏற்காது, சனாதனத்தை எதிர்த்தால் இதுதான் நடக்கும்" என காங்கிரஸ் தலைவர் ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் கூறி உள்ளார்.
மேலும், ”சனாதன தர்மத்தை அவதூறு செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும். மகத்தான வெற்றியைப் பெற்ற பாஜகவுக்கு வாழ்த்துகள். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் அற்புதமான தலைமைக்கு இந்த வெற்றி மற்றொரு சான்று” என முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் ட்வீட் செய்துள்ளார்.
இந்த நிலையில் வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு உதயநிதியின் சனாதன பேச்சுதான் காரணம் என இணையதளங்களில் மீம்ஸ்கள் வலம் வருகின்றன.
”பால் ஊற்றிய உதயநிதி! பரிதாபமானது காங்கிரஸ்!” என தலைப்பிடப்பட்ட மீம்ஸில் வடிவேலு காமெடி வீடியோ உடன் ஒப்பிடப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
உதயநிதி சனாதனத்தை ஒழித்தாரோ இல்லையோ காங்கிரஸ் கட்சியை ஒழித்துவிட்டார். இந்தியா கூட்டணியை ஒழித்துவிட்டார். திராவிட மாடல் வளர்ப்பு அப்படி. ஆழ்ந்த அனுதாபங்கள் ராகுல் காந்தி என பதிவர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
3 வட இந்திய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு பேச்சுதான் என்று கூறி பாஜகவினர் இணையதளங்களில் தொடர் விமர்சனம் செய்து வருகின்றனர்.