தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  நம்பர் 1 முதல்வர் என்பதைவிட நம்பர் 1 தமிழகம் என்பதையே விரும்புகிறேன்-ஸ்டாலின்

நம்பர் 1 முதல்வர் என்பதைவிட நம்பர் 1 தமிழகம் என்பதையே விரும்புகிறேன்-ஸ்டாலின்

Karthikeyan S HT Tamil

Mar 20, 2022, 06:53 PM IST

google News
சென்னை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் வண்டலூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசின் வேலைவாய்ப்பு முகாம்களில் இதுவரை 41 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் வண்டலூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசின் வேலைவாய்ப்பு முகாம்களில் இதுவரை 41 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் வண்டலூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசின் வேலைவாய்ப்பு முகாம்களில் இதுவரை 41 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து ஆற்றிய உரை:

'இந்த இனியதொரு விழாவில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்களை இந்த காலை நேரத்தில் பார்க்கும் போது, நான் அதிகமான உற்சாகத்தையும், மனமகிழ்ச்சியையும் அடைந்து கொண்டிருக்கிறேன். கையில் பட்டத்துடனும், மனதில் கனவுகளோடு, எதிர்கால வாழ்க்கையை ஏக்கத்தோடு, அதேநேரத்தில் செயல்படும் உற்சாகத்தோடு நீங்கள் எல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறீர்கள். நிச்சயமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன், உங்கள் கனவுகள் உறுதியாக நிறைவேற்றப்படும். உங்களது ஏக்கங்கள் தீரும். உங்களது திறமைகளுக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். உங்களுடைய எதிர்காலம் ஒளிமயமானதாக அமையும் என்று தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக மட்டுமல்ல, உங்களில் ஒருவனாக, உங்களது அன்புச் சகோதரனாக, அத்தனை பேரையும் நான் வாழ்த்துவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, இதுதான், இந்த அரசினுடைய மன்னிக்கவும், நம்முடைய அரசின் நோக்கம். அதுதான் நம்முடைய அரசினுடைய இலக்கு. கல்வி என்றால் அடிப்படைக் கல்வி மட்டுமல்ல, அனைவருக்கும் உயர்கல்வி என்பதுதான் நமது அரசினுடைய இலக்காக அமைந்திருக்கிறது. அதேபோல், அனைவருக்கும் ஏதோ ஒரு வேலை அல்ல, அனைவருக்கும் அவரவர் படிப்புக்கு ஏற்ற, தகுதிக்கு ஏற்ற வேலை வழங்கப்பட்டாக வேண்டும், அதுதான் இந்த அரசினுடைய லட்சியம், இந்த அரசினுடைய இலக்கு. அதனால்தான், பள்ளிக் கல்வியையும், கல்லூரிக் கல்வியையும் மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம். அப்படி பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கக்கூடிய மாணவர்களை, அவர்கள் விரும்புகின்ற வேலைக்கு தகுதியுடையவர்களாக உருவாக்கி வருகிறோம். என்னுடைய கனவுத் திட்டமாக அண்மையிலே அறிவிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கக்கூடிய 'நான் முதல்வன்' என்ற திட்டம் பற்றி நீங்கள் எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பள்ளிப்பருவத்திலேயே வழிகாட்டு முயற்சிகளை மேற்கொண்டு கல்லூரிகளில் வளர்ச்சிக்கேற்ற பாடத்திட்டங்களை தேர்வு செய்ய உதவி செய்து வேலைவாய்ப்புக்களை உறுதிசெய்யக்கூடிய அரிய திட்டம்தான் 'நான் முதல்வன்' என்கிற அந்தத் திட்டம். இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் அவர்களை மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குவது தான் இந்த 'நான் முதல்வன்' திட்டத்தினுடைய நோக்கம். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, அதனை மேலும் ஊக்குவிப்பதுதான் இந்தத் திட்டத்தினுடைய இலட்சியம். அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும்.

அறிவுத்திறத்தால் அனைத்து மாணவர்களையும், இளைஞர்களையும் வளர்த்தெடுக்கக்கூடிய திட்டம்தான் அந்தத் திட்டம். வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அந்த வேலைக்குத் தகுதியான இளைஞர்களை உருவாக்குவது என்கிற சக்கரச் சுழற்சியுடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த நாள் இங்குள்ள இளைஞர்களுக்கு மிகமிக முக்கியமான நாள். படித்த இளைஞர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதை இந்த அரசு தனது முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது.

இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இன்று வரை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் 36 பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களும் 297 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் - வேலையளிப்போர் மற்றும் வேலை தேடுவோர் ஆகிய இரண்டு தரப்பையும் நேரடியாக இணைத்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஒரு பாலமாக அமைந்திருக்கின்றன. இது வரை நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில் 5,708 நிறுவனங்கள் கலந்து கொண்டன. 2,50,708 பேர் வேலைவாய்ப்புகளை நாடி வந்தார்கள். அவர்களில் 41 ஆயிரத்து 213 பேர் வேலை கிடைத்திருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், 517 பேர் மாற்றுத்திறனாளிகள் என்பதும் நான் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். புதிய மாவட்டமாக இந்த செங்கல்பட்டு மாவட்டம் துவக்கப்பட்ட பிறகு முதல் முறையாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. இந்த முகாமில் வேலைவாய்ப்பினை பெற்ற இளைஞர்களுக்கு உரிய பணி நியமன ஆணைகளை வழங்குவதில் நான் பெறும் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன்.

இந்த வேளையில் நான் மூன்று வேண்டுகோள்களை உங்கள் முன்னால் வைக்க விரும்புகிறேன். முதலாவதாக, இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தவேண்டும். அதைத்தான் அந்தப் பொறுப்பிற்குரிய அமைச்சராக இருக்கின்ற கணேசனை நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். இரண்டாவதாக, சொல்ல வேண்டுமென்றால், இந்த முகாம்களில் பங்கேற்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரு வேண்டுகோள். 'நான் முதல்வன்' திட்டத்தில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து தமிழ்நாட்டினுடைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், திறன் பயிற்சியும் வழங்கி தமிழ்நாட்டில் வேலையின்மை என்பதே இல்லாத நிலையினை உருவாக்க அயராது உழைக்குமாறும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்திட கைகொடுக்குமாறும் உங்களை வேண்டி, விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். மூன்றாவதாக, இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்று வேலை பெற்ற இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு பெறமுடியாத இளைஞர்களுக்குமான ஒரு வேண்டுகோள். வேலை பெற்றவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு மேலும் முன்னேற வேண்டும்.

வேலையைப் பெற முடியாதவர்கள் சோர்ந்து போகாமால், கவலைப்படாமல் நீங்கள் அயர்ந்து அதில் உங்கள் கவனத்தை செலுத்தவிடாமல், வேலைவாய்ப்புத் திறன்களை நீங்கள் வளர்த்துக்கொண்டு, அடுத்தக் கட்டத்தை நோக்கிச் செல்லத் தயாராக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, இந்த நோக்கத்தைப் பற்றி நம்முடைய அமைச்சர்கள் கணேசன், அன்பரசன் மற்றும் இந்தத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய அதிகாரிகளும், மாவட்ட ஆட்சித் தலைவரும் உங்களிடத்திலே விளக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். எனவே அதைபற்றி நான் அதிகம் விளக்கம் சொல்ல வேண்டிய தேவையில்லை என்று நான் கருதுகிறேன். நான் முதலமைச்சராக உங்களுடைய அன்போடு, ஆதரவோடு இந்தப் பொறுப்பை நான் ஏற்ற பிறகு எத்தனை முறை முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி இருக்கிறோம். அதன் மூலமாக எப்படியெல்லாம் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதற்கான திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

எல்லோரும் இன்றைக்கு என்னைப் பாராட்டுகின்ற நேரத்தில் நம்பர்-1 முதலமைச்சர், நம்பர்-1 முதலமைச்சர் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கேட்பதற்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில், நம்பர்-1 முதலமைச்சர் என்பதை விட, நம்பர்-1 தமிழ்நாடு என்று சொல்லக்கூடிய நிலை உருவாக வேண்டும். அதற்கு "வேலை இல்லை, வேலை கிடைக்கவில்லை, வேலைவாய்ப்பைப் பெற முடியாத நிலையில் இருக்கிறேன்" என்று அந்த சொல்லை இந்த 5 ஆண்டு காலத்திற்குள் நிச்சயமாக நாங்கள் போக்குவோம் என்ற உறுதியை உங்களிடத்தில் எடுத்துச் சொல்லி, வந்திருக்கக்கூடிய உங்கள் அத்தனைப் பேருக்கும் என்னுடைய நல்வாழ்த்துகளைச் சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.'' இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அடுத்த செய்தி