Vaiko: ‘நாடாளுமன்றத் தேர்தலில் துரை வைகோ போட்டியா?’ வைகோ பரபரப்பு பதில்!
Jan 01, 2024, 03:45 PM IST
”ஸ்டாலின் தலைமையிலான அரசு சக்திக்கு மீறி எல்லா பகுதிகளுக்கும் நிவாரணம் அளித்து வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்த அரசை நம்புகிறார்கள்”
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
கேள்வி: சனாதன எதிர்ப்பு பேச்சுக்கு இந்தியா கூட்டணியில் இருந்தே எதிர்ப்புகள் வருகிறதே?
பதில்: இத்தனை கட்சிகள் சேர்ந்த பிறகு ஒருசில கருத்துகள் எதிர்பாகத்தான் வரும் அதனை பொருட்படுத்த வேண்டியது இல்லை; இதனால் வடமாநிலங்களில் எதிர்ப்பு உருவானது போல் பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள். ஆனால் அது மாதிரி ஏதும் இல்லை.
கேள்வி: தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு தேர்தலில் எதிரொலிக்குமா?
பதில்: புயல் வெள்ளத்தை இந்த அரசு கையாண்ட விதமும், எதிர்கொண்ட விதமும், 2015ஆம் ஆண்டில் அதிமுக அரசு எதிர்கொண்ட விதத்தையும் மக்கள் எடைபோட்டு பார்ப்பார்கள். ஸ்டாலின் தலைமையிலான அரசு சக்திக்கு மீறி எல்லா பகுதிகளுக்கும் நிவாரணம் அளித்து வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்த அரசை நம்புகிறார்கள்.
கேள்வி: இந்திய கூட்டணியில் தமிழ்நாட்டில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும்?
பதில்: பொங்கலுக்கு பிறகு பேச்சுவார்த்தை நடக்கும் என சொல்லி உள்ளார்கள்
கேள்வி: இந்த வருடமாவது நீட் விலக்கு சாத்தியம் ஆகுமா?
பதில்: நீட் தேர்வை எதிர்த்து தற்கொலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. மனிதாபிமானத்தோடு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி: மீண்டும் வாக்குச்சீட்டு மூலம் தேர்தலை நடத்துவது சாத்தியமா?
பதில்: அமெரிக்காவில் வாக்குச்சீட்டு முறைதான் உள்ளது. மின்னனு வாக்கு இயந்திரம் தயாரிக்கும் ஜப்பான் கூட வாக்குச்சீட்டைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதில் எளிதாக தவறு செய்ய முடியும் என அதில் விற்பனர்களாக உள்ளவர்கள் சொல்கிறார்கள். அது இன்னும் ஆய்வுக்குறியதாகவே உள்ளது.
கேள்வி: ஆளுநர் - முதலமைச்சர் சந்திப்பை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: சந்தித்து உள்ளார்கள், சுமூகமான சந்திப்பு என சொல்லி உள்ளார்கள். முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கேள்வி: சேலத்தில் ஏழை விவசாயி ஒருவருக்கு அதிக சொத்து சேர்த்துள்ளதாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதே?
பதில்: இது விவசாயிகளுக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகம். அமலாக்கத்துறையை மிரட்டுவதற்காகத்தான் பயன்படுத்துகிறார்கள்.
கேள்வி: பாராளுமன்றத்தில் துரைவைகோ பேச வாய்ப்புள்ளதா?
பதில்: அது சொல்ல முடியாது; மாவட்ட செயலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். அது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது.