தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sanitation Workers : தூய்மைப் பணியாளர்களை மீண்டும் மீண்டும் வஞ்சிப்பதா? - மநீம

Sanitation workers : தூய்மைப் பணியாளர்களை மீண்டும் மீண்டும் வஞ்சிப்பதா? - மநீம

Divya Sekar HT Tamil

Oct 23, 2022, 02:09 PM IST

google News
தூய்மைப் பணியாளர்களை மீண்டும் மீண்டும் வஞ்சிப்பதா? என கோவை மாநகராட்சிக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தூய்மைப் பணியாளர்களை மீண்டும் மீண்டும் வஞ்சிப்பதா? என கோவை மாநகராட்சிக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தூய்மைப் பணியாளர்களை மீண்டும் மீண்டும் வஞ்சிப்பதா? என கோவை மாநகராட்சிக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.100 மட்டுமே தினச் சம்பளமாக வழங்குவது கொடுமையானது என மநீம தெரிவித்துள்ளாது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் ஆர். தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாநகராட்சியில் தனியார் மூலம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு நிர்ணயித்த தினச் சம்பளம் ரூ.721. ஆனால், ஒப்பந்ததாரர் வழங்குவதோ ரூ.333. இத்தனை குறைந்த சம்பளத்தில் வாழ்வது எப்படி? இதேபோல, கோவை மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மிகக் குறைந்த சம்பளத்துக்குப் பணிபுரிகின்றனர். குறிப்பாக, ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.100 மட்டுமே தினச் சம்பளமாக வழங்குவது கொடுமையானது.

மேலும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி பல்லாண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், அந்தக் கோரிக்கையும் நிறைவேறவில்லை. கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் காலை 5.45 மணிக்கே பணியைத் தொடங்க வேண்டும். நகரிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள், அந்த நேரத்தில் பணிக்கு வருவது எப்படி? பேருந்து வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இருட்டு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பணிக்கு வரும்போது பலரும் விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஆங்கிலேயர் காலத்து வேலை நேரத்தைக் கைவிட்டு, காலை 7 மணிக்குப் பணியைத் தொடங்க அனுமதிக்க வேண்டும். தீபாவளிக்கு சட்டரீதியான போனஸ்கூட கொடுக்கவில்லையாம். இனாம்தான் கொடுத்துள்ளனர் என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

ஈரோடு, திருப்பூர் போன்ற மாநகராட்சிகளில் எல்லாம் அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்கும்போது, கோவை மாநகராட்சியில் மட்டும் தூய்மைப் பணியாளர்களை மீண்டும் மீண்டும் வஞ்சிப்பதும், அவர்களின் வயிற்றில் அடிப்பதும் ஏன்? எனவே, உடனடியாக அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 

அதேபோல, சட்டப்படியான 8.33 சதவீத போனஸ், பணி நிரந்தரம், வேலை நேர நிர்ணயம், தூய்மைப் பணியாளர்களுக்கு நகரின் மத்தியில் குடியிருப்புகள், முறையாக சீருடை, பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல், குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றித்தர வேண்டும். தங்களது வாழ்வாதாரத்துக்காகப் போராடும் தூய்மைப் பணியாளர்களுக்காக, மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், தங்களது கோரிக்கைகளுக்காக வரும் 25-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் முழு ஆதரவு தெரிவிப்பதுடன், அவர்களுடன் இணைந்துப் போராட்டம் நடத்தும். இப்பிரச்சினை தீவிரமடைவதற்கு முன், தமிழக முதல்வர் தலையிட்டு, உடனடியாக தீர்வுகாண வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி