MNM : மாணவர்களுக்கென சிறப்பு பேருந்துகள் இயக்க மநீம கோரிக்கை!
Nov 23, 2022, 07:48 AM IST
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கென சிறப்பு பேருந்துகள் இயக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் மாணவரணி மாநில செயலாளர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை : மாணவர்களுக்கென சிறப்பு பேருந்துகள் இயக்க மநீம கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மநீம மாணவரணி மாநில செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், ”அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுப் போக்குவரத்தை மட்டுமே நம்பி கல்வி கற்க செல்கின்றனர்.
மாணவர்கள் பாடங்களை சரியாக கிரகித்துக் கொள்ளும் வகையில், எந்த வித மன உளைச்சலோ அவதியோ இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால், குறித்த நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதால், கூட்ட நெரிசலில் சிக்குவதும், படிக்கட்டில் பயணம் செய்வதும் மாணவர்களின் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது.
கூட்ட நெரிசலில் பயணம் செய்வது மாணவர்களுக்கு மட்டுமல்லாது, மற்ற சக பயணிகளுக்கும் பல அசௌகரியங்களை ஏற்படுத்திகிறது. ஏற்கனவே நிரம்பி வழியும் பேருந்தில், மேலும் சில பயணிகள் ஏறிவிடக் கூடாது என்பதற்காக, மக்களின் கோபத்தையும் மீறி ஓட்டுனர்கள் நிறுத்தத்திலிருந்து சில அடிகள் தள்ளியே பேருந்தை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.
இதனால் மாணவர்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகின்றார்கள். CUMTA கலந்தாலோசனைக் கூட்டத்தில், தமிழக முதல்வர் அவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களைக் கருத்தில் கொண்டு நெரிசலைத் தவிர்க்கும் செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். மாணவர்களுக்கென சிறப்புப் பேருந்துகளை இயக்குவது, நெரிசலையும், பரிதாப மரணங்களையும் தவிர்க்க ஒரு சிறந்த தீர்வாகும் என்பதால் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
மாணவர்களின் பாதுகாப்பையும், மன நிலையையும் கருத்தில் கொண்டு, பள்ளி - கல்லூரி நேரங்களில் மாணவர்களுக்கென சிறப்புப் பேருந்துகள் விரைவில் இயக்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது”என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்