Startup Story: ’மேஜிக் 20 தமிழ்! ஆடியோ பாட்காஸ்ட் துறையில் அதிரவிடும் சென்னை ஸ்டார்ட் அப்’
Nov 21, 2023, 04:55 PM IST
“வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற வேட்கையோடு உள்ளவர்களுக்கு இந்த செயலி பக்கபலமாக இருக்கும்”
யூடியூப் உள்ளிட்ட வலைத்தளங்களில் வீடியோ கண்டெண்டுகளை பார்ப்பது போலவே தற்போது பாட்காஸ்ட் உள்ளிட்ட ஆடியோ கண்டெண்டுகளை கேட்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. அரசியல், சினிமா, நாவல்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை தரும் பாட்காஸ்டுகளுக்கு மத்தியில் வணிகம், தொழில் நுட்பம், சுய முன்னேற்றம் உள்ளிட்ட புனைவுகள் அல்லாத கண்டெண்டுகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் செயலி ஒன்றை சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
”Global Knowledge in Local Language”
’Magic 20 தமிழ் ’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தை அருண் பாரதி, வி.கார்த்திகேயன், பாலாஜி உள்ளிட்டோர் தொடங்கி உள்ளனர். ”Global Knowledge in Local Language” என்பதே இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் ஒன் லைன் எனலாம்.
இது தொடர்பாக அவர்களிடம் பேசும் போது, கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் இப்படி ஒரு செயலியை உருவாக்குவது குறித்த முன்னெடுப்புகளை எடுத்தோம். யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீடியோ கண்டெண்டுகளை அதிகம் பேர் பார்த்து வருகின்றனர்.
வேகமாக வளர்ந்து வரும் ஆடியோ பாட்காஸ்ட்
ஆனால் வீடியோக்களை பார்த்துக் கொண்டே மற்ற வேலைகளை செய்வது சிரமம் என்பதுதான் வீடியோ ஸ்டீமிங் துறைல் உள்ள சிக்கல். இந்த சிக்கல்களுக்கு ஆடியோ கண்டெண்டுகள் தீர்வாக அமையும்.
ஆடியோ கண்டெண்ட் துறை வளர்ந்து வருகிறது என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் சமைக்கும்போதும், நடைபயிற்சி மற்றும் அலுவலகம் செல்லும் போதும் பாட்காஸ்ட்களை கேட்கும் பழக்கம் அதிகரித்து வருவது தெரிந்தது.
அமெரிக்காவில் வளர்ந்து வரும் பாட்காஸ்ட் இந்தியாவிலும் வளரும் என்பது எங்களுக்கு தெரிந்தது. ஆனால் இந்த ஆடியோ பாட்காஸ்ட் துறை வளருவதால் வீடியோ பார்ப்பது அழிந்துவிடாது என்றாலும் ஆடியோ கேட்பதை மக்கள் விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொண்டோம்.
புனைவு அல்லாத ஆடியோ கண்டெண்டுக்கள்
அரசியல், சினிமா, விளையாட்டு, கிரைம் உள்ளிட்ட கண்டெண்டுகள் அதிகம் ஈர்க்க கூடியதாக உள்ளது. இவற்றை தாண்டி ஈர்க்க கூடிய கண்டெட்டுகளாக புனைவு அல்லாத கண்டெண்டுகள் உள்ளது.
தலைமை பண்பு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல், நிதி மற்றும் முதலீடு, தொழில்முனைவு, சுயமுன்னேற்றம், வெற்றியாளர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட புனைவு அல்லாத ஆடியோ கண்டெண்டுகளை கொடுப்பதே எங்கள் செயலியின் நோக்கம்.
வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற வேட்கையோடு உள்ளவர்களுக்கு இந்த செயலி பக்கபலமாக இருக்கும். தற்போதைய போட்டி நிறைந்த யுகத்தில் நாம் கற்றுக்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ளாவிட்டால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது என்றனர்.
”வருவாய் ஈட்ட தொடங்கி உள்ளோம்”
2022ஆம் ஆண்டில் சில லட்சங்கள் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தற்போது வெற்றிகரமாக வருவாய் ஈட்டத் தொடங்கி உள்ளது. கட்டண சந்தாதாரர்கள் மூலமும்,வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் இந்த ஆடியோ கண்டெண்டுகளையும் விற்பனை செய்வதன் மூலமும் இந்த மேஜிக் தமிழ் 20 நிறுவனம் வருவாயை ஈட்டி வருகிறது.
ஒரு நாளைக்கு 20 நிமிடம்
தமிழ் பேசும் சமூகம் உலகம் முழுவதும் பரவி உள்ள நிலையில் 25 முதல் 30 சதவீதம் வரை வெளிநாடு வாழ் தமிழர்களிடமும் இருந்தும் செயலிக்கான வரவேற்பு இருக்கும் என எதிர்பார்ப்பதாக மேஜிக் 20 தமிழ் நிறுவனத்தின் நிறுவனர்கள் தெரிவித்தனர்.
ஒரு நபர் ஒரு செயலியில் எவ்வுளவு நேரம் செலவு செய்கிறார் என்பதை வைத்தே இன்றைய செயலி வணிகம் நடக்கிறது. ஆனால் எங்களுக்கு அந்த நோக்கம் இல்லை. ஒரு நபர் ஒரு நாளைக்கு வெறும் 20 நிமிடங்கள் இந்த செயலியை பயன்படுத்தினாலே போதுமானது. எங்கள் செயலிகள் மூலம் ஆடியோக்களை கேட்பதை ஒரு அன்றாட பழக்கமாக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
டாபிக்ஸ்