ED அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் மறுப்பு!
Dec 20, 2023, 10:53 AM IST
திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் 40 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில் அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார்.
லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் 40 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில் அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் சுரேஷ் பாபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்த நிலையில், அது குறித்த விசாரணை அமலாக்கத்துறையிடம் வந்துள்ளது.
இந்த வழக்கில் இருந்து மருத்துவரை விடுவிக்க மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.3 கோடி லஞ்சம் கேட்டதாகவும், ஆனால், மருத்துவர் சுரேஷ் பாபு தரமறுக்கவே, கண்டிப்பாக ரூ. 51 லட்சமாவது அன்பளிப்பாகத் தரவேண்டும் எனக் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து 01.11.2023 அன்று திண்டுக்கல் - நத்தம் சாலையில் வைத்து ரூ.20 லட்சத்தைக் கொடுத்துள்ளார், மருத்துவர் சுரேஷ் பாபு. இதனை அடுத்து நேற்று(நவம்பர் 30) இரவு மீதி ரூ.31 இலட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனால் வெறுத்துப்போன மருத்துவர் சுரேஷ் பாபு லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் கொடுத்து அனுப்பினர்.
பின் மருத்துவர் சுரேஷ் பாபு, திண்டுக்கல் தோமையார்புரம் அருகே நின்றுகொண்டு இருந்த அமலாக்கத்துறை அதிகாரியின் காரில் பணத்தை வைத்து உள்ளார். இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரி காரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரட்டிச்சென்று கொடைரோடு டோல்கேட் அருகில் மடக்கிப் பிடித்து கைது செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது.
இதனை தொடர்ந்து மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விடிய விடிய சோதனை நடத்தி சென்றனர்.
இதனை தொடர்ந்து சிறையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த டிசம்பர் 5ஆம் தேதி அன்று தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி மோகனா முதல் விசாரணையில் இருப்பதால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனை தொடர்ந்து ஜாமீன் தள்ளுபடிக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கித் திவாரி மேல்முறையீடு செய்திருந்தர். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரனை இன்று நடைபெற்ற நிலையில் அங்கித் திவாரிக்கு ஜாமீன் தர தமிழ்நாடு அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.