Varichiyur Selvam: கொலை வழக்கு..ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்!
Nov 22, 2023, 04:20 PM IST
கூட்டாளியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர், அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், கருப்பாயூரணியில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வம், செந்தில்குமார் உட்பட சிலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து, செந்தில்குமார் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திடீரென மாயமானார். இது தொடர்பாக செந்தில்குமாரின் மனைவி முருகலட்சுமி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அருப்புக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளர் கருண்காரத் உத்தவ் ராவ் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகளால் செந்தில்குமார் கடத்திக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து செந்தில்குமார் மாயமானதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, வரிச்சூர் செல்வம் உட்பட அவரின் கூட்டாளிகள் ஐந்து பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இதில், வரிச்சியூர் செல்வம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்டு உள்ள வரிச்சியூர் செல்வம், தனக்கு ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார். அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த அக்டோபர் மாதம் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கடந்த 15ஆம் தேதி நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கில் புதிதாக ஓட்டப்பிடாரம் காவல் துறையினர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் காவல் துறையினர் மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்