ADMK: ’ஜெ.நினைவுநாளில் சசிலகாவுக்கு பேரிடி!’ அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் என தீர்ப்பு!
Dec 05, 2023, 11:39 AM IST
”ADMK Case: கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சசிகலா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது”
அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சசிகலா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட நிலையில், துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை சசிகலா நியமித்தார். இதற்கான தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு இருந்தன.
சசிகலா ஊழல் வழக்கில் சிறை சென்ற நிலையில், அதிமுக பொதுக்குழு கூடி சசிகலா, தினகரன் ஆகியோரை அப்பதவிகளில் இருந்தும், அதிமுக உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்குவதாக அறிவித்தது.
அதற்கு பதிலாக அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம்மும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தன்னை அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வி.கே.சசிகலா வழக்கு தொடந்தார்.
சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் இருந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்ற சென்னை உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவு பிறப்பித்தது.
சென்னை உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.கே.சசிகலா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று தீர்ப்பு வழங்கி சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.