தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ltte Chief Prabhakaran: எல்டிடிஈ தலைவர் பிரபாகரன் உண்மையில் ஒரு சர்வாதிகாரியா?

LTTE chief prabhakaran: எல்டிடிஈ தலைவர் பிரபாகரன் உண்மையில் ஒரு சர்வாதிகாரியா?

I Jayachandran HT Tamil

Nov 26, 2022, 02:45 PM IST

google News
இலங்கையில் ஆயுதமேந்தி ஈழ விடுதலைக்குப் போராடிய எல்டிடிஈ அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்து இங்கு காணலாம்.
இலங்கையில் ஆயுதமேந்தி ஈழ விடுதலைக்குப் போராடிய எல்டிடிஈ அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்து இங்கு காணலாம்.

இலங்கையில் ஆயுதமேந்தி ஈழ விடுதலைக்குப் போராடிய எல்டிடிஈ அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்து இங்கு காணலாம்.

இலங்கையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு சம வாய்ப்பு தரமுடியாது என அப்போதைய அதிபர் பண்டாரநாயக, அவரது மனைவியும் அதிபருமாக இருந்த சிரிமாவோ பண்டாரநாயக தலைமையிலான அரசு 1970ல் அறிவித்தபோது தமிழர்கள் கடும் அதிர்ச்சியை அடைந்தனர்.

இலங்கை பூர்வீகக் குடிகளாக இருந்த தமிழர்களும், தேயிலை தோட்டத்தில் வேலைபார்ப்பதற்காக இந்தியாவில் இருந்து ஆங்கிலேயேர் காலத்தில் கொண்டுசெல்லப்பட்ட மலையகத் தமிழர்களும் அரசின் இந்த உத்தரவால் தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்படும் அபாயத்தை உணர்ந்தனர்.

பல்கலைக்கழகங்களில் படிக்க தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இலங்கைத் தமிழர்களின் தந்தை எனப் போற்றப்பட்ட செல்வநாயகம் தலைமையில் நீண்ட காலமாகப் போராடியும் இலங்கைத் தமிழர்களின் உரிமையை மீட்க முடியவில்லை.

இந்நிலையில் சிலர் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடத் தீர்மானித்தனர்.

அப்படி உருவான சில குழுக்களில் புதிய புலிகள் என்ற பெயரில் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் தலைமையிலான அமைப்பு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வடக்கு கடலோரத்தில் அமைந்துள்ள வல்வெட்டித்துறை கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை, வள்ளிபுரம் பார்வதி தம்பதிக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் இளைய பிள்ளையாக பிறந்தவர் பிரபாகரன்.

1954ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று பிரபாகரன் பிறந்தார். இன்று அவரது பிறந்தநாள்.

பிரபாகரன் தனது பள்ளிக்காலத்திலேயே மிகவும் புத்திசாலியான மாணவராகத் திகழ்ந்தார். அதிக புத்தக வாசிப்புப் பழக்கம் உள்ளவர். நாளடைவில் இலங்கை அரசின் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் குறித்து அரசியல் கூட்டங்கள் மற்றும் சித்தாந்தவாதிகளின் பேச்சுக்களையும் கேட்டு அவருக்குள் பெரும் போராட்டக் குணம் உருவாகியது.

அமைதியாக பேச்சுநடத்தினால் வேலைக்காகாது என்று முடிவெடுத்த பிரபாகரன் ஆயுதம் ஏந்த முடிவு செய்தார். அதன்படியே தனது தலைமையில் புதிய புலிகள் என்ற அமைப்பையும் ரகசியமாகத் தொடங்கினார்.

பின்னர் இலங்கைத் தமிழருக்கு எதிராக செயல்பட்ட ஒரு மேயரை தனது கைகளாலேயே துப்பாக்கியில் சுட்டுக் கொன்றார். இதுதான் அவரது முதல் கொலை. தன்னைப் பொருத்தமட்டிலும் தமிழருக்கு எதிரானவர்களை அழித்தொழிக்கும் பணியாக அவர் கருதினார்.

பிளாட், டெலோ போன்று வேறு சில குழுக்களும் ஆயுதப் போராட்டத்தில் இருந்தனர். சிறீசபாரத்தினம், பத்மநாபா போன்ற தலைவர்கள் கீழ் இந்த இயக்கங்கள் செயல்பட்டன.

இப்படிப் பிரிந்து போராடுவதால் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறி தனது அமைப்பில் சேருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தும் பலனில்லை.

இந்நிலையில் 1983ஆம் ஆண்டு இலங்கை வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழீழப் போராட்டத் தலைவர்கள் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோரை அதிகாரிகள் தூண்டுதல் பேரில் சிங்களக் கைதிகள் திட்டமிட்டு மிகக் கொடூரமாகக் கண்களைத் தோண்டி வெட்டிக் கொன்றனர்.

இதைத் தொடர்ந்து தமிழீழப் பகுதிகளில் பெரும் பதற்றமும், கலவரமும் ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கான தமிழ்ப்பெண்களை சிங்கள வெறியர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொன்றனர். கொழும்பு நகரில் பிரபலமாக இருந்த தமிழர்களின் வணிக நிறுவனங்கள், தங்க நகைக்கடைகள் குறிவைத்து சிங்கள ரௌடிகளால் சூறையாடப்பட்டது.

உயிருக்குப் பயந்து லட்சக்கணக்கான மக்கள் இலங்கையில் இருந்து அகதிகளாகப் புறப்பட்டு லண்டன், ஜெர்மனி, பிரான்ஸுக்குத் தப்பியோடினர்.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் கள்ளத்தோணிகள் மூலம் ராமேஸ்வரம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு தமிழக அரசு புகலிடம் தந்து மறுவாழ்வு முகாம்களில் சேர்த்துக் கொண்டது.

இதனிடையே தமிழக அரசியல் காரணங்களால் சிறீசபாரத்தினம் தலைமையிலான போராட்டக் குழுவுக்கு திமுக தலைவர் கருணாநிதி நிதியளிக்கப்போவதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து எல்டிடிஈ தலைவர் பிரபாகரனை அழைத்து அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் மிகப் பெரியத் தொகையை தனது சொந்தப் பணத்தில் இருந்து தந்தார். கருணாநிதி தருவதாகக் கூறிய பணத்தை பிரபாகரன் அன்புடன் மறுத்துவிட்டார்.

எம்ஜிஆர் தந்த பணத்தில் எல்டிடிஈக்குத் தேவையான நவீன ஆயுதங்களை பிரபாகரன் வாங்கி குவித்தார்.

அப்போது ஒன்றிய பிரதமராக இருந்த இந்திரா தனது ராணுவத்தின் மூலம் எல்டிடிஈயினருக்கு ஆயுதப் பயிற்சியை தமிழகத்தில் மேற்கொள்ள ஏற்பாடு செய்தார்.

தமிழகத்தில் மதுரை எல்லீஸ்நகர், நெல்லை உள்பட பல இடங்களில் ரகசியமாக எல்டிடியினருக்கு ஆயுதப் பயிற்சி தரப்பட்டது.

இதுதவிர எல்டிடிஈயினரில் மிகக் குறிப்பிட்ட வீரர்களைத் தேர்ந்தெடுத்து அப்போது இஸ்ரேலுக்கு எதிராக இன உரிமைக்குப் போராடிக் கொண்டிருந்த பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அரபாத்திடம் அனுப்பினார். அங்குதான் எல்டிடிஈயினருக்கு மிக நவீனமான ஆயுதங்கள் அறிமுகமாகின. அவர்களும் வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பி பல்வேறு பகுதிகளில் தீரமாகச் சண்டையிட்டனர்.

சிறிதுசிறிதாக எல்டிடிஈ அமைப்பு மீது மக்களிடையே நம்பிக்கைத் தோன்றிய வேளையில் சில சிறிய ஆயுதக்குழுக்கள் தானாகக் கலைக்கப்பட்டு எல்டிடிஈயுடன் இணைந்தன.

ஒருகட்டத்தில் பிரபாகரன் தனது விடுதலைப்புலிகள் அமைப்பை மிகப் பெரிய அச்சுறுத்தலாக இலங்கைக்கு எதிராக உருவாக்கினார். மக்கள் செல்வாக்கு பிரபாகரனுக்குப் பெருகியது.

புலம்பெயர்ந்து அயல்நாடுகளில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களிடம் இருந்தும் நன்கொடையாக பெரும் தொகை குவியத் தொடங்கியது.

இந்நிலையில் விடுதலைப்புலிகள் அமைப்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க பிரபாகரன் பல்வேறு கடுமையான விதிகளை அமல்படுத்தினார்.

விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் செயல்படும் ஆண்களும் பெண்களும் காதலிக்கவோ, திருமணம் செய்யவோ தடைவிதிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்புக்காகப் போராடுவதற்கு பள்ளிச்சிறுவர்களும் சேர்க்கப்பட்டனர். இதில் வலுக்கட்டாயப்படுத்தப்பட்டு சிறார்கள் சேர்க்கப்பட்டதாகவும் பிரபாகரன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் தங்கள் உரிமைக்காக உயிர்விடுவதற்கு இதையெல்லாம் சட்டை செய்ய முடியாது என்று கூறிவிட்டார் பிரபாகரன்.

காலீஸ்தான் விடுதலை அமைப்பு ஆதரவு மெய்க்காப்பாளர்களால் இந்தியப் பிரதமர் இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது மூத்த மகன் ராஜிவ் பிரதமரானார். பதவியேற்று 3 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைப் போராட்டம் குறித்து பேசுவதற்காக பிரபாகரனுக்கு ராஜிவ் அழைப்பு விடுத்தார்.

பேச்சுவார்த்தைக்கு தில்லிக்கு வந்த பிரபாகரனை அங்குள்ள அசோகா ஹோட்டலில் அதிகாரிகள் சிறை வைத்தனர். இலங்கை பிரச்னை தொடர்பாக ராஜிவ் செயல்படுத்த விரும்பும் திட்டத்துக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பிரபாகரன் ஒத்துழைக்க வேண்டுமென்றும் நிர்பந்திக்கப்பட்டார்.

ஆலோசனைக்குப் பிறகு முடிவு சொல்வதாகக் கூறிவிட்டு இலங்கை திரும்பிய பிரபாகரன் இந்தியாவில் தன்னை இந்திய அரசு நடத்திய விதம் குறித்து தமிழ் மக்களிடையே பகிரங்கமாக பொதுக்கூட்டம் நடத்திப் பேசினார்.

ராஜிவ் அரசு கூறிய நிபந்தனைகளை ஏற்கப் போவதில்லை என்று அறிவித்த பிரபாகரன் இதனால் தனது உயிரே போனாலும் பரவாயில்லை. இது நமது உரிமை பற்றிய விஷயமாகும். அயலார் முடிவெடுக்க அனுமதிக்க முடியாது என்றார்.

இதைத் தொடர்ந்து ராஜிவுக்கும் இலங்கை அதிபர் ஜெயரத்னவுக்கு ஏற்பட்ட ஒப்பந்தப்படி இந்திய அமைதிப்படை எனும் ராணவப்படையை இலங்கைக்கு ராஜிவ் அனுப்பினார்.

அத்துடன் ஆயுதம் ஏந்திப் போராடும் தமிழர்கள் தங்களது ஆயுதங்களை அமைதிப்படையினரிடம் ஒப்படைத்துவிடவேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இலங்கை சென்ற அமைதிப்படை தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படாமல் அவர்களுக்கு எதிராக பல வன்முறைகளில் ஈடுபட்டதால் பிரபாகரன் கடும் கோபமடைந்தார்.

இதனால் இலங்கை ராணுவம் ஒதுங்கிக் கொண்டு இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் நேரடி சண்டை மூண்டது.

ஒருகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் தரையிறக்கப்பட்ட இந்திய ராணுவத்தின் தலைசிறந்த ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட பாராசூட் வீரர்கள் தரையிறங்கும்போது அவர்களை வானிலேயே முற்றிலுமாக விடுதலைப்புலிகள் கொன்று குவித்தனர். இதில் ராஜிவ் கடும் அதிருப்தியடைந்தார்.

இதைத் தொடர்ந்து அமைதிக்குப் படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மோதல் தீவிரமடைந்தது.

இந்நிலையில் தமிழகத்திலும் இந்திய அமைதிப்படையின் செயல்பாட்டுக்கு எதிர்ப்புகள் கிளம்பின.

பிரபாகரனுக்கு திமுக தலைவர்கள் கருணநிதி, வைகோ போன்றோர் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தனர்.

சூழ்நிலைகள் இப்படியிருக்க ஒருகட்டத்தில் போர்நிறுத்த அறிவிப்பு அமல்படுத்தப்பட்ட இருதரப்பினரும் அமைதி காத்தனர். இந்நிலையில் இலங்கை சிறையில் இருந்த விடுதலைப்புலிகளின் 13 முக்கியத் தலைவர்களை விடுவிப்பதாகக் கூறிவிட்டு அவர்களைக் கொடுமைப் படுத்தியதால் அனைவரும் சயனைடு அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பிரபாகரன் மீண்டும் சண்டையைத் தொடங்கினார். அன்று தொடங்கிய யுத்தம் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமர் வி.பி.சிங் உத்தரவின்பேரில் இந்திய அமைதிப்படை வாபஸ் ஆனபிறகும் தொடர்ந்தது. இலங்கையிலும் ஆட்சி மாற்றங்கள் நிகழந்தபோதும் சண்டை ஓயவில்லை.

பிரபாகரன் அயராமல் யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

தமிழருக்கு எதிராகச் செயல்பட்ட புல்லுருவிகள் எனக் கூறி தமிழ் அரசியல்வாதி அமிர்தநாயகம் உள்பட பலரை விடுதலைப்புலிகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.

அதுமட்டுமல்லாமல் தமிழரின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையில் இறங்கிய அதிபர் பிரேமதாசா, தமிழர்கள் பகுதியில் சிங்களக் குற்றவாளிகளை குடியமர்த்திய அமைச்சர் லலித் அதுலத் முதலி மற்றும் விஜய ரணதுங்க போன்ற முக்கியத் தலைவர்கள் விடுதலைப்புலிகளின் தற்கொலைத் தாக்குதலால் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கையில் பொதுத்தேர்தல் வந்தபோது ரணில் விக்ரமசிங்கே கட்சி பெரும்பான்மை பெரும் நிலை இருந்தது. ஆனால் தமிழர்கள் பகுதியில் யாரும் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்று பிரபாகரன் கட்டளையிட்டார். இதனால் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் ஆகும் வாய்ப்பு பறிபோய் ராஜபட்சே வந்தார்.

இத்தனைக்கும் தனக்கு ஆதரவு தந்தால் இலங்கையில் தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் பகுதியில் தன்னாட்சிப் பொறுப்புகளையும் தமிழர்களுக்கு மீண்டும் சமஉரிமைகளை அளிப்பதாக பிரபாகரனுக்கு ரணில் விக்ரமசிங்கே வாக்கு தந்தார். ஆனால் மற்ற தலைவர்கள் போலத்தான் இவரும் என்று முடிவெடுத்த பிரபாகரன் தன்னிச்சையாக தேர்தலை புறக்கணிக்கக் கூறிவிட்டார்.

இதுதான் பிரபாகரன் தனது வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு. அதன்பின் பதவிக்குவந்த ராஜபட்சே சிங்களப் பேரினவாதிகளுடன் கைகோத்து தமிழர்களை மேலும் சிரமத்துக்கு ஆளாக்கினார்.

இதுஒருபுறமிருக்க விடுதலைப்புலிகள் அமைப்பில் வீரர்களும், வீராங்கனைகளும் ஒருவருக்கொருவர் திருமணம் செய்துகொள்ளக்கூடாது, காதலிக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்த பிரபாகரனே, அந்த அமைப்பில் இருந்த மதிவதனியை காதலித்துத் திருமணம் செய்தது உள்ளுக்குள் புகைச்சலைக் கிளப்பியது.

அதேபோல் பிரபாகரன் சார்ந்த வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அமைப்பில் உயர் அந்தஸ்து பதவிகளுக்கு நியமிக்கப்படுவதாகவும், கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மீனவச் சமுதாயத்தினர் உயிரை மாய்க்கும் கரும்புலியில் சேர்க்கப்படுவதாகவும், பதவி அதிகாரத்தில் புறக்கணிப்பதாகவும் ஒரு மனநிலை மெல்ல வெளிக்கிளம்பியது. இதைத் திட்டமிட்டு இந்திய அரசு கிளப்பியதாகக் கூறப்பட்டாலும் இந்த சாதிப் பாகுபாடு விடுதலைப்புலிகள் அமைப்பில் மிகப்பெரும் பிளவை ஏற்படுத்தியிருந்தது என்பதுதான் யதார்த்தம்.

இந்த விஷயத்தை சமயோஜிதமாகப் பயன்படுத்திக் கொண்ட ராஜபட்சே, கிழக்குப் பகுதி கமாண்டரும் மீனவச் சமுதாயத்தைச் சேர்ந்தவருமான கருணாவை ஆசை வார்த்தைகள் கூறி தனக்கு ஆதரவாகத் திருப்பினார்.

இதையடுத்து விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகுவதாகவும் கிழக்குப் பகுதியில் உள்ள வீரர்கள் இனி தனது கட்டுப்பாட்டில் இயங்குவர். பிரபாகரன் பேச்சைக் கேட்கப்போவதில்லை என்று கூறி கருணா தனது ஆதரவாளர்களுடன் பிரிந்தார்.

கருணாவின் இந்தச் செயல் எல்டிடிஈயை மிகவும் பலவீனப்படுத்தி விட்டது. கருணாவை சமரசம் செய்யும் வேலையிலும் பிரபாகரன் முனையவில்லை.

இதனிடையே முன்னாள் பிரதமர் ராஜிவ் சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்க சோனியா தலைமை வகித்த காங்கிரசின் கட்சி முடிவெடுத்தது.

அதன்பிறகு இலங்கை அரசுக்கு இந்திய அரசின் மறைமுக ஆதரவு கிடைக்க ஆயுதங்கள், அதிநவீன ரேடார்கள், ஏகப்பட்ட நிதி உதவிகளுடன் தனது ராணுவத்தைப் பலப்படுத்திக் கொண்டு விடுதலைப்புலிகளுடன் ராஜபட்சே பொருதினார்.

பல்வேறு உள்குத்துகளால் விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவராக இருந்த மாத்தையாவுக்கு பிரபாகரன் மரணதண்டனை விதித்தார். எல்டிடிஈ உளவுப்படைத் தலைவர் பொட்டுஅம்மான் பற்றி தகவல் எதுவும் காணாமல் போனார்.

நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதியான கிட்டு, வெளிநாட்டிலிருந்து ஆயுதங்களை கப்பலிக் கொண்டுவந்தபோது ராணுவத் தாக்குதலுக்கு ஆளாகி ஒரு காலை இழந்து ஊனமானார்.

இலங்கைக்கு எதிரான போராட்டத்தில் பிரபாகரனுக்கு ராஜகுருவாக இருந்த ஆன்டன் பாலசிங்கமும் உடல் நலக்குறைவால் காலமானார். இது பிரபாகரன் சந்தித்த பேரிழப்பாகும்.

கிட்டத்தட்ட தனித்துவிடப்பட்ட சூழ்நிலைக்கு பிரபாகரன் தள்ளப்பட்டார். அதேவேளையில் இலங்கை ராணுவத் தளபதி ஃபொன்சேகா தலைமையிலான படையினர் நான்காம் விடுதலை யுத்தத்தை மிகத் தீவிரமாகக் களமாடினர். விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பான்மைப் பகுதிகள் அடுத்தடுத்து வீழ்ந்தது.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு முழுவதும் இலங்கை அரசிடம் மீண்டும் வந்தது.

இலங்கையின் வடமேற்கேயுள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் மிகக் குறுகிய சதுரப்பரப்பளவில் விடுதலைப்புலிகள் கொண்டு தள்ளப்பட்டனர்.

முள்ளிவாய்க்காலில் தங்கியிருந்த லட்சக்கணக்கான தமிழர்களும் ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகளும் ஒரு சில நாட்களில் கொன்று குவிக்கப்பட்டனர்.

இது 2009ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இறுதிக்கட்டமாக இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே சமரச முயற்சியை செய்துவந்த நார்வே நாட்டுத் தூதர்களை பிரபாகரன் தொடர்புகொண்டு தானும் வீரர்களும் சரணடைவது குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இறுதியாக பிரபாகரனின் சடலம் முள்ளிவாய்க்கால் பகுதியில் கிடப்பதாகவும் அதை அடையாளம் கண்டு சொல்லுமாறு கருணாவை ராஜபட்சே கேட்டுக் கொண்டார். அங்கு சென்ற கருணா அது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன்தான் என்று உறுதி செய்தார். இதற்கு இரு நாள்கள் முன்னதாக பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி போரில் வீரமரணம் அடைந்திருந்தார்.

பிரபாகரன் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரை இலங்கை ராணுவத்தினர் பிடித்துக் கொன்றுவிட்டனர். பாலச்சந்திரன் ராணுவ முகாமில் உட்கார்ந்து சாப்பிடும் படங்களை இலங்கை அரசே வெளியிட்டிருந்தது. ஆனால் திடீரென மறுநாள் மார்பில் துப்பாக்கிக்குண்டுகள் துளைத்திருந்த நிலையில் பாலச்சந்திரன் இறந்து கிடந்த படங்கள் வெளியானதால் ஒட்டுமொத்தத் தமிழர்களும் பேரதிர்ச்சியில் ஆழந்தனர்.

கடைசி தருணத்தில் ஈவு இரக்கமின்றி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு மீது மனித உரிமை மீறல் பிரச்னைகள் எழுப்பப்பட்டபோதும் எந்தப் பயனும் இல்லை.

தமிழீழம் உதயமாகும், தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்று மானத்துடன் நெஞ்சம் நிமிர்ந்து இலங்கையில் வாழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வழிவகுப்பார் என்ற நம்பிக்கை அவரது மறைவோடு தவிடுபொடியானது.

ஆக்ரோஷமான போர்க்குணம் இருந்தாலும் சற்று அரசியல் சிந்தனையில் நிதானம் இருந்திருந்தால் அந்த நம்பிக்கை ஒருவேளை கைகூடி வந்திருக்கலாம். இலங்கைத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவராக இருந்தாலும் பிரபாகரனுக்குள் இருந்த சர்வாதிகாரப் போக்கு அவரது வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி