தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kalaignar Pen Statue: பேனா சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி! ஆனால்…! ஆமையை சுட்டிக்காட்டி செக் வைத்த அமைச்சகம்!

Kalaignar Pen Statue: பேனா சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி! ஆனால்…! ஆமையை சுட்டிக்காட்டி செக் வைத்த அமைச்சகம்!

Kathiravan V HT Tamil

Jun 22, 2023, 03:47 PM IST

google News
ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என நிபந்தனை விதிப்பு
ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என நிபந்தனை விதிப்பு

ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என நிபந்தனை விதிப்பு

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க 15 நிபந்தனைகள் உடன் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இறுதி ஒப்புதலை அளித்துள்ளது.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் 81 கோடி ரூபாய் செலவில் 134 அடி உயரத்தில் பேனா நினைச்சின்னம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது. மெரினா கடற்கரையில் இருந்து கண்ணாடி பாலம் வழியாக கடலில் நடந்து சென்று கலைஞரின் பேனா சின்னத்தை பார்வையிடும் வகையில் இந்த சின்னத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

கடற்கரையில் கலைஞர் பேனா சின்னம் அமைப்பது குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில் பேனா நினைச்சின்னத்தை கடலில் வைத்தால் உடைப்பேனென்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருந்தார்.

இந்த நிலையில் கலைஞரின் பேனா சின்னம் அமைக்க ஒப்புதல் கேட்டு தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை, மத்திய அரசுக்கு கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி கடிதம் அனுப்பியது. மேலும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவிடம் சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் கலைஞர் பேனா சின்னம் அமைக்க அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் 15 நிபந்தனைகள் உடன் கலைஞர் பேனா சின்னத்தை அமைத்துக் கொள்ளலாம் என்று தமிழ்நாடுஅரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபந்தனைகள்:-

800 மீட்டர் தொலைவில் உள்ள ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும்.

கட்டுமானப்பணிகளுக்காக எந்த நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது.

கட்டுமான பகுதியில் மண் அரிப்பு மற்றும் மணல் திரட்சி குறித்து தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் கண்காணிக்க வேண்டும்

ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது

நினைவுச்சின்னத்தில் இருந்து சாலை இணைப்பு, போக்குவரத்து மேலாண்மை, அவசர கால பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்

பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான விவரங்களில் தவறான, அல்லது போலியான தகவல்கள் இருந்தால் எந்த நேரத்திலும் அனுமதி வாபஸ் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி