Jayalalitha death:ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்
Oct 18, 2022, 11:58 AM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அளித்தார்.
இந்நிலையில் இந்த அறிக்கை இன்று (அக்.18) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்போலோ மருத்துவமனைக்கு வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனையின் பிரதாப் ரெட்டியை விசாரிக்க வேண்டும் என்றும் விசாரணை ஆணைய அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உயிர் காக்கும் இதய அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்க மருத்துவர் ரிச்சர்ட் பிலே பரிந்துரை செய்திருந்ததாகவும், ஆஞ்சியோ, அறுவை சிகிச்சைக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் அச்சிகிச்சை கடைசி வரை தரப்படாதது ஏன் எனவும் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
டாபிக்ஸ்