சென்னையில் போராட்டம் நடத்திய ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கைது!
Jan 30, 2024, 08:41 PM IST
- பழைய ஒய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பல்வேறு அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், சென்னை டி.பி.ஐ வளாகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலை முதலே குவியத் துவங்கினர். இருப்பினும் காவல்துறை சார்பில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, டி.பி.ஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற 200-க்கும் மேற்பட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது தமிழக அரசு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். கோரிக்கைகள் குறித்து ஜாக்டோ ஜியோ போராட்ட ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் பேசும் போது, "கடந்த அரசு இருந்தபோது, சில கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. தற்போதைய அரசு வாக்குறுதி கொடுத்தும், மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை." என்று குற்றம்சாட்டினர். போராட்டம் காரணமாக துணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.