IT raid: அமைச்சர் எ.வ.வேலு கல்லூரியில் மீண்டும் ஐடி ரெய்டு! திமுகவினர் அதிர்ச்சி!
Nov 22, 2023, 12:24 PM IST
”Minister EV Velu: தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை ஐடி சோதனை நடந்து இருந்தது”
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் வருமானவரித்துறை மீண்டும் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
திருவண்ணாமலையில் இயங்கிவரும் அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அலுவலகத்தில் இன்று காலை முதல் வருமானவரித்துறையை சேர்ந்த 6க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை நடைபெற்றது.
அப்போது, திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகள், சென்னையில் அவருக்கு தொடர்புடையவர்கள் வீடுகள், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதுமட்டுமின்றி ரியல் எஸ்டேட் நிறுவனங்களான காசாகிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் உள்ளிட்ட நிறுவனங்களிலும் இந்த சோதனை நடந்தது.
இந்த சோதனை குறித்து கடந்த நவம்பர் 7ஆம் தேதி அன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, ”எனக்கு 48.33 ஏக்கர் நிலம் உள்ளது. காந்தி நகரில் உள்ள எனது இடம் ஒன்றை மருத்துவமனைக்கு குத்தகை கொடுத்துள்ளேன். சென்னையில் எனக்கு ஒரே ஒரு வீடு உள்ளது. இதுதான் எனக்கு உள்ள சொத்து. அமைச்சர் ஆன பிறகு ஒரு செண்ட் இடத்தை கூட நான் வாங்கவில்லை. வருமானவரித்துறையிடம் ஆண்டுதோறும் சரியாக வரி செலுத்தி வருகிறேன். எங்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்து பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை” என கூறி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் எ.வ.வேலு தொடர்புடைய கல்லூரியில் நடைபெறும் ஐடி ரெய்டு திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.