Thirunavukarasar: ’நா போய் பாஜகவுலயா! அவனை செருப்பால அடிப்பேன்!’ டென்ஷன் ஆகி கத்திய திரு’நாவுக்கரசர்’!
Feb 28, 2024, 04:26 PM IST
“Thirunavukarasar: நீ பொய் சொல்ற, நீ காசு வாங்கிட்டு சொல்ற, நான் ஐந்து ஆண்டுகளாக வந்து கொண்டு இருக்கிறேன். சீமான் பேசுற மாதிரி கெட்டவார்த்தையில் பேசுனாதான் நீயெல்லாம் அடங்குவபோல, நீ யார் எனக்கு சர்டிபிகெட் தருவது”
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திருச்சி எம்பி திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் பிரதமர் மோடி சாமி கும்பிட சென்றார், ஆனால் அதே ஊரில் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் அப்படியே உள்ளது. அந்த மருத்துவமனையை கட்டி திறந்து வைத்தால் மக்கள் மகிழ்வார்கள். வெள்ள நிவாரணத்திற்கு நிதி கேட்டு ஒரு ரூபாய் கூட தரவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். வெறும் தேர்தல் ஸ்டண்டாக சுற்றுப்பயணம் வருவதால் எந்த பயனும் கிடையாது. தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுகின்றனர். இது போன்று நடக்கும் போது இலங்கை அரசுடன் பேசி அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படை செய்யும் அட்டகாசத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
கேள்வி:- திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக, திமுக வேட்பாளர் அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறதே?
அதிக வாய்ப்புன்னு யார் சொன்னது, அருண் நேரு கட்சி என்ன சொல்லுதோ அதை கேட்போம் என்றார். அதில் ஒன்றும் தவறே கிடையாது. திமுக திருச்சியில் போட்டியிட வேண்டும் என கேட்கும் உரிமை எல்லா கட்சிக்கும் உள்ளது. இவர்களுக்கு உள்ள உரிமை ஏற்கெனவே எம்பியாக உள்ள எங்களுக்கு கிடையாதா?, சிட்டிங் எம்பி என்ற முறையில் நான் இங்குதான் போட்டியிடுவேன் என்று சொல்லும் உரிமை எங்களுக்கு உள்ளது.
கேள்வி:- திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை என போஸ்டர் ஒட்டி உள்ளனரே?
நீ பொய் சொல்ற, நீ காசு வாங்கிட்டு சொல்ற, நான் ஐந்து ஆண்டுகளாக வந்து கொண்டு இருக்கிறேன். சீமான் பேசுற மாதிரி கெட்டவார்த்தையில் பேசுனாதான் நீயெல்லாம் அடங்குவபோல, நீ யார் எனக்கு சர்டிபிகெட் தருவது.
தமிழ்நாடு முழுவதும் அதிமுக, பாஜகவினர் எம்பியை காணவில்லை என போஸ்டர் ஒட்டி உள்ளனர். எல்லா எம்பியும் அமெரிக்காவுக்கா போய்ட்டாங்க?; என்னை காணவில்லை என நீ எப்படி சொல்லலாம்.
கேள்வி:- எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி பேசி உள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?
பிரதமர் என்ன பேச வேண்டும் என நாம் சொல்லியா கொடுக்க முடியும். செல்வாக்கு உள்ள தலைவர்களை பற்றி பேசினால் வாக்குவங்கியை கவரலாம் என அவர் நினைக்கலாம். அதிமுக பிரிந்துள்ள நிலையில் அக்கட்சி ஓட்டுக்களை பிளக்க பிரதமர் மோடி பேசி இருக்கலாம்.
கேள்வி:- பாஜகவில் நீங்கள் இணைய உள்ளதாக கூறப்படுகிறதே?
அவனை செருப்பால் அடிப்பேன்; அதுமாதிரி சொல்றவனை செருப்பால் அடிப்பேன். இனி சீமான் மாதிரி பேசலாம் என முடிவு செய்துவிட்டேன். நான் ஐம்பது ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். நீங்கள் ஸ்டாலினை பார்த்து இப்படி கேட்பீர்களா?, நீங்கள் நினைத்தாலும் அனுப்ப முடியாது.