HT Book Special: கோயில் யானை தள்ளிவிட்ட பின் பாரதியார் இப்படியா கூறினார்!
May 25, 2023, 06:15 AM IST
Bharathiyar Sarithiram: அங்கு கோயில் யானைக்கு தினமும் பழமும் தேங்காயும் அளிப்பார் பாரதியார். ஒரு நாள் அந்த யானைக்கு மதம் பிடித்துவிட அதன் 4 கால்களிலும் சங்கிலியிட்டு பிணைத்திருந்தார்கள்.
எழுத்தாளர், இதழாசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான மகாகவி பாரதியார் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு கொண்டவர்.
''காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்.'' என்று பாடியவர்.
பாரதியாரின் வீட்டில் வறுமை நிலை இருந்தபோதிலும், "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா" என்றும் பாடியவர்.
கடன் வாங்கி அரிசி வாங்கி வந்தாலும், அதை ஒரு பங்கை குருவிகளுக்கு போட்டு மகிழ்ந்தார் பாரதியார்.
சென்னை திருவல்லிக்கேணியில் வசித்தபோது வீட்டிற்கு அருகே இருந்த பார்த்தசாரதி கோயிலும் தினமும் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் பாரதியார்.
அங்கு கோயில் யானைக்கு தினமும் பழமும் தேங்காயும் அளிப்பார் பாரதியார். ஒரு நாள் அந்த யானைக்கு மதம் பிடித்துவிட அதன் 4 கால்களிலும் சங்கிலியிட்டு பிணைத்திருந்தார்கள்.
இருப்பினும், அன்புடன் யானைக்கு உணவளிக்கச் சென்றார் பாரதியார். அப்போது யானை சட்டென்று பாரதியாரை தள்ளிவிட்டது. ரத்த காயமடைந்த அவரை, அருகிலிருந்தவர்கள் உடனடியாக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்ததனர்.
அப்போது பாரதியார் யானை தன்னை விட்டது குறித்து கூறியது தொடர்பாக அவரது மனைவி செல்லம்மா பாரதியார், பாரதியார் சரித்திரம் என்ற நூலில் இவ்வாறு எழுதியுள்ளார்.
அவரது எழுத்துக்களிலிருந்து இனி..
பாரியார் யானையினத்தில் சிறிதும் கோபங்கொள்ளவில்லை. ''இன்னாரென்று தெரியாமல் தள்ளிவிட்டது. தெரிந்திருந்தால் தள்ளியிருக்காது. அப்படி துன்புறுத்தும் எண்ணமிருந்திருந்தால் நான் கீழே விழுந்ததும் துதிக்கையால் தூக்கி எறிந்திருக்காதா? அல்லது கால்களினால் துவைத்திராதா? அப்படியே நின்றதன் அர்த்தம் என்ன? என்னிடம் அதற்குள்ள அன்பே காரணம்! என்று உள்ளம் குளிர்ந்தார் இவ்வாறு செல்லம்மா பாரதியார் எழுதியிருக்கிறார்.
வஉசி நூலகம் வெளியிட்டுள்ள 'பாரதியார் சரித்திரம்' நூலின் விலை ரூ.100. இதுபோன்ற பாரதியார் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் குறித்து செல்லம்மா பாரதியார் இந்நூலில் விவரித்திருக்கிறார். பாரதியார் குறித்து தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது!
டாபிக்ஸ்