Thanjavur Big Temple: தஞ்சை பெரிய கோயில் தொடர்பான வீடியோ சர்ச்சை..அறநிலையத்துறை அளித்த விளக்கம் இதோ..!
May 02, 2024, 04:58 PM IST
தஞ்சை பெருவுடையார் கோயிலின் தரைத்தளங்களை உடைப்பது போன்று வெளியான வீடியோ குறித்து இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவதூறு பரப்பும் வகையில் காணொலி வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும், தஞ்சை பெரிய கோயிலில் மத்திய தொல்லியல் துறையே பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதாகவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயிலின் அடித்தளத்தை அசைக்கும் வகையில் தரைத்தளங்களை உடைத்து இந்து சமய அறநிலையத் துறையால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒரு காணொலி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயில் மத்திய அரசின் கீழ் உள்ள இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்தத் திருக்கோயில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் இந்திய தொல்லியல் துறையினரால் மட்டுமே மேற்கொள்ளப்படும். இந்து சமய அறநிலையத் துறையால் தினசரி பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சன்னதியின் பின்புறத்தில் உள்ள தரைத்தளம் மேடு பள்ளங்களுடன் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடப்பதற்கு சிரமமாக உள்ளதால் தரைத்தளத்தில் பராமரிப்பு பணிகள் இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தத் திருக்கோயிலில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து இந்திய தொல்லியல் துறையின் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத் துறையின் மீது அவதூறு பரப்பும் வகையில் காணொலி வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயில் வரலாறு:
தஞ்சை பெரிய கோயிலின் தல விருட்சமாக வன்னி மரமும், தலத் தீர்த்தமாக சிவகங்கைத் தீர்த்தமும் விளங்குகின்றன. விஞ்ஞான தொழில் நுட்ப ரீதியாக கட்டுமானத்துறையில் வளர்ச்சி காணாத சமயங்களில் சுமார் 1000 ஆண்டுகள் முன்னதாக அப்போது சோழ அரசராக விளங்கிய அருள்மொழி வர்மன் என்ற ராஜ ராஜ சோழன் இக்கோயிலை கட்டினார்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயிலின் பெருவுடையார் என்று அழைக்கப்படும் மூலவர் சந்நிதியில் சிவபெருமான் லிங்க வடிவில் உள்ளார். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில், உலகின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகும். இங்குள்ள நந்தி, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிலை வடிவமாகும். இது 13 அடி நீளமும், 9 அடி உயரமும் கொண்ட சிலை. இந்த கோயிலின் மிக முக்கியச் சிறப்பு, கோயில் கோபுரத்தின் நிழலான நண்பகல் நேரத்தின் உத்திராயணத்தில் தரையில் விழாது. இன்று வரையும் இதன் பின்னணி விஞ்ஞானிகள், பொதுமக்கள் என அனைவருக்குமே பிரமிக்க வைக்கும் மர்மமாகவே உள்ளது. கிட்ட தட்ட 3 கோடி உள்ளூர்வாசிகள், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தஞ்சை பெரிய கோயிலை ஆண்டுதோறும் பார்வையிடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9