நச் என்று ‘Resume’ ரெடி பண்ண -இதோ பளிச் டிப்ஸ்கள்
Jan 16, 2023, 08:55 AM IST
சுயவிவரக்குறிப்பு (Resume) என்பது உங்களின் சுய விவரங்கள் அடங்கிய குறிப்பு ஆகும். ஒரு வேலைக்கு விண்ணபிக்கும்போது பயன்படுத்தப்படும் இந்த சுயவிவரக்குறிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று இங்கு காணவாம்.
ரெஸ்யூம் (Resume), பயோ டேட்டா (bio data), கரிக்குலம் விட்டே curriculam vitae (CV), ஆகிய மூன்றுமே நமது சுயவிவரங்களை தெரிவிப்பதுதான் என்றாலும், மூன்றுக்கும் வேறுபாடு உள்ளது. காவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, உயரம், எடை போன்ற முழுவிவரங்கள் அடங்கியதை பயோ டேட்டா என்று குறிப்பிடலாம். அதை திருமணம் சார்ந்த விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம். கரிகுலம் விட்டே என்பது உயர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பயன்படுத்துவதாகும். மற்ற அனைத்து வேலை தேடுபவர்களும் பயன்படுத்துவது ரெஸ்யூம் என்றழைக்கப்படுகிறது.
எத்தனை பக்கம் இருக்க வேண்டும்?
ஒரு ரெஸ்யூம் 2 பக்கம் மட்டுமே இருக்க வேண்டும். ஒருவர் ரெஸ்யூமை படிக்க கிட்டத்தட்ட 30 முதல் 40 நொடிகள் மட்டுமே பயன்படுத்துகிறார். எனவே அனைத்து விவரங்களையும் இரண்டே பக்கங்களில் தெளிவாக அடக்குவது நல்லது.
எப்படி தயாரிக்க வேண்டும்?
ரெஸ்யூமின் முதல் பக்கத்திலே மேற்பகுதியிலே உங்களது பெயர், முகவரி, இமெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் தெளிவாக இருக்க வேண்டும். அது அவர்கள் உங்களை உடனடியான தொடர்புகொள்ள உதவும். இமெயில் முகவரி உங்கள் பெயரை கொண்டதாக இருக்க வேண்டும். அது உங்களை அடையாளப்படுத்துவதாக இருக்கவேண்டும் எனவே வேறு எதையும் முன்னிறுத்தாமல் தயாரித்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் சுய விவரக்குறிப்பில் நிச்சயமாக உங்களின் மார்பளவு புகைப்படம் இடது அல்லது வலது ஓரத்தில் இருக்க வேண்டும். புகைப்படம் நேராக இருக்க வேண்டும் செல்பி எடுப்பதுபோல் நின்று எடுக்கக்கூடாது.
எந்தத் துறைக்கு விண்ணப்பிக்கப்போறீர்களோ அதற்கு ஏற்றாற்போல், இரண்டு வரியில் மிகச்சுருக்கமாக எழுதவேண்டும். மேலும் உண்மையான விவரங்களை மட்டுமே எழுத வேண்டும். எடுத்துக்காட்டாக அதில் உங்களின் அனுபவ குறிப்புகள், நீங்கள் எவ்வாறு உத்வேகத்துடன் பணிபுரிவீர்கள் என்று விளக்கலாம். மற்றவர்களை கவருவதற்காக எந்த பொய்யான தகவலும் கொடுக்கக்கூடாது. உங்களைப்பற்றிய முக்கியமான விஷயத்தை அடிக்கோடிட்டு காட்டலாம்.
முதல் முறை வேலைக்கு விண்ணப்பிப்பவாரக இருப்பின் உங்கள் கல்வித்தகுதிகளை சரியான வரிசையிலும், ஏற்கனவே பணி அனுபவம் பெற்றவராக இருப்பின் அதன் விவரங்களையும் குறிப்பிட வேண்டும். இடையில் வேலை செய்யாத காலம் இருந்தால் அதையும் குறிப்பிட வேண்டும். ஏனெனில் தற்போது நிறுவனங்கள் நீங்கள் வேலை செய்த பழைய நிறுவனங்களில் விசாரிக்கின்றன எனவே விவரங்கள் சரியாக இருப்பது அவசியம். நிறுவனங்கள் எந்த வழியாக ரெஸ்யூமை அனுப்ப சொல்கிறார்களோ அதன் வழியாக அனுப்ப வேண்டும்.
அதேபோல் நாம் விண்ணப்பிக்கும் வேலைக்கு ஏற்ற வகையில் ரெஸ்யூம் இருக்க வேண்டும். ஒரே ரெஸ்யூமை அனைத்து வேலைக்கும் பயன்படுத்தக்கூடாது.
இப்போது இணையதளங்களில் நிறைய மாதிரிகள் உள்ளன. அவற்றை பார்த்தும் உங்கள் ரெஸ்யூமின் தரத்தை மேம்படுத்தலாம்.
இத்தனை வகை ரெஸ்யூமா?
ரிவர்ஸ் குரோனலாஜிக்கல் ரெஸ்யூம் (reverse chronological resume)
வேலைகளில் முன் அனுபவம் உள்ளவர்கள் இதுபோன்ற ரெஸ்யூம்களை பயன்படுத்த வேண்டும். இதில் தற்போது செய்யும் வேலை விவரங்களில் துவங்கி மற்ற விவரங்கள் இடம்பெறவேண்டும்.
பங்ஷனல் ரெஸ்யூம் (functional resume)
முதலில் கல்வி விவரம், கூடுதல் திறன், பணி அனுபவங்களை குறிப்பிட்டு, பின்னர் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு ஆண்டுகள் வேலை செய்தீர்கள் மற்றும் அது சார்ந்த அனுபவங்களை அடுத்தடுத்த தெரியப்படுத்தலம்.
ஹைபிரிட் ரெஸ்யூம் (hydrid resume)
மேற்கூறிய இரண்டு ரெஸ்யூம்களின் கலவையாக ஹைபிரிட் ரெஸ்யூம் இருக்க வேண்டும்.
ஒருவருக்கு வேலை வாங்கி தருவதே ஒரு ரெஸ்யூமின் வேலையாகும். அதை மற்றவர்களை ஈர்க்கும்படியாக தயார் செய்தால் அது ஒருவருக்கு வேலை வாங்கிக்கொடுக்கும்.
வீடியோ ரெஸ்யூம்
அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த காலத்தில் கையில் எழுதியதில் துவங்கிய இந்த ரெஸ்யூம்கள் தயார் செய்வது, அடுத்து அச்சிட்டு வழங்குவதாக வளர்ந்து தற்போது, வீடியோவில் உங்களைப்பற்றி கூறுவதாக வளர்ந்துள்ளது. எனவே நீங்கள் வீடியோ ரெஸ்யூமையும் தயார் செய்யலாம். அதற்கு தரமான வீடியோ மற்றும் ஆடியோவுடன் உங்களைப்பற்றிய விவரங்களை உங்கள் அறிமுகம், உங்கள் தகுதிகள், உங்கள் தனித்தன்மை, நீங்கள் எதிர்பார்க்கும் வேலை குறித்து ஒவ்வொன்றாக விளக்கிக்கூறவேண்டும்.
டாபிக்ஸ்