Heavy Rain: ’ஓராண்டு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது!’ தலைமை செயலாளர் பரபரப்பு பேட்டி!
Dec 18, 2023, 10:25 AM IST
”1070 என்ற கட்டணமில்லா எண்ணில் பொதுமக்கள் தங்களது பிரச்னைகளை சொல்லலாம்”
தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புபணிகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வரலாற்றில் இல்லாத அளவுக்கு 3 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இந்த மழை மேகவெடிப்பால் பெய்யவில்லை. மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மீட்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் தகவல் தொடர்பு பிரச்னைகள் இதுவரை வரவில்லை. சிறப்பு அதிகாரிகளாக 12 ஐஏஎஸ் அதிகாரிகள்,பல்வேறு துறைகளை சேர்ந்த மூத்த அலுவலகர்கள் ஏற்கெனவே தென் மாவட்டங்களில் பணி செய்து வருகின்றனர்.
1070 என்ற கட்டணமில்லா எண்ணில் பொதுமக்கள் தங்களது பிரச்னைகளை சொல்லலாம். இதுவரை 3863 புகார்கள் இந்த எண் மூலம் வந்துள்ளது. அதில் 3732 புகார்களில் நடவடிக்கை எடுத்துள்ளோம். 144 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது.
தூத்துக்குடி மாநகரம், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், காயல்பட்டினம் பகுதிகளில் மிக கனமழை பதிவாகி உள்ளது. மீட்பு பணிகளுக்காக போதுமான அளவுக்கு படகுகளை தயாராக வைத்துள்ளோம்.
தூத்துக்குடியில் 96 சதவீத பேருந்துகள் இயங்கி வருகிறது. நெல்லை மாநகராட்சியில் மட்டும் 61 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகங்கள் அவசர உதவியாக கேட்கும் நிலையில் முன்னுரிமை அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகள் தொடர்ந்து பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டு இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் பேருந்துகள் இன்று இரவு வழக்கம்போல் புறப்படும் என கூறினார்.