HBD MK Stalin: கோபாலபுரம் முதல் கோட்டை வரை! மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆன கதை!
Mar 01, 2024, 06:15 AM IST
“HBD MK Stalin: ஸ்டாலின் என்ற பெயரை சூட்டியதாலோ என்னவோ தொடக்கம் முதலலே நிராகரிப்புகளும் எதிர்ப்புகளும் அவருக்கு சிறுவயதில் இருந்தே பழக்கமாகத் தொடங்கின”
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி - தயாளு அம்மாளுக்கு 1953ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தை பிறந்திருந்தது.
அய்யாத்துரை TO ஸ்டாலின்
தனது அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய தலைவர்களான அய்யா பெரியார், அண்ணாதுரை ஆகியோரை நினைவுகூறும் வகையில் அய்யாதுரை என்ற பெயரை தனது குழந்தைக்கு சூட்ட முடிவு செய்திருந்தார் கருணாநிதி
ஆனால் அதே தேதியில் ரஷ்யாவின் இரும்பு மனிதரான சோவியத் யூனியன் அதிபர் ஜோசப் ஸ்டாலின் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி உலகம் முழுவதும் உள்ள கம்யூனிச சித்தாந்தவாதிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது.
மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட ஜோசப் ஸ்டாலின் சிகிச்சை பலனின்றி மார்ச் 5ஆம் தேதி மரணமடைந்த நிலையில்,ஸ்டாலின் என்ற பெயரை தனது மகனுக்கு சூட்டினார் கருணாநிதி.
பெயர் பிரச்னையால் பள்ளியை மாற்றிய கலைஞர்
ஸ்டாலின் என்ற பெயரை சூட்டியதாலோ என்னவோ தொடக்கம் முதலலே நிராகரிப்புகளும் எதிர்ப்புகளும் அவருக்கு சிறுவயதில் இருந்தே பழக்கமாகத் தொடங்கின.
ஸ்டாலினின் தொடக்க கல்விக்காக சென்னையின் புகழ் பெற்ற சர்ச் பார்க் பள்ளியில் அட்மிஷனுக்காக முரசொலி மாறன் அணுகியபோது, ஸ்டாலின் என்ற பெயரை மாற்றினால் மட்டுமே பள்ளியில் அட்மிஷன் தரமுடியும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர் பள்ளி நிர்வாகிகள், இந்த செய்தி கருணாநிதியின் கவனத்திற்கு சென்றபோது, அவர் பெயரை மாற்றாமல் பள்ளியை மாற்றினார்.
கோபாலபுரம் அருகே இருந்த பள்ளி ஒன்றில் தொடக்க கல்வியும், பின்னர் சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் மேல்நிலைக்கல்வியும் பயின்ற ஸ்டாலின் அரசியலையும் சேர்ந்தே கற்கத் தொடங்கினார். திமுகவின் பொதுக்கூட்டங்களுக்கு செல்லுதல், தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கியை கொண்டு ”உதய சூரியனுக்கு ஓட்டுப்போடுங்கள்” என்பதாக தொடர்ந்தது அவரது கட்சிப்பணி.
கோபாலபுரம் இளைஞர் திமுக
தனது பதின்பருத்தில் கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை தொடங்கி அண்ணா, பெரியார், கலைஞர் உள்ளிட்டோரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்துவது, மேடை நாடகங்களில் நடிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
திருமண மாப்பிள்ளை முதல் மிசா கைதி
சென்னை விவேகாதந்தா கல்லூரியில் பியூசியும், மாநிலக் கல்லூரியில் இளங்கலை பட்டமும் பெற்றிருந்த ஸ்டாலின் 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி துர்கா என்கிற சாந்தாவை திருமணம் செய்து கொண்டார்.
1976ஆம் ஆண்டு நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டபோது, உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்பு சட்டத்தில் (MISA) கைது செய்யப்பட்டு சிறையில் கடுமையான சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டார்.
திமுக இளஞரணி செயலாளர்
ஒன்றரை ஆண்டுகால மிசா சிறைவாசம் ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. 1983ஆம் ஆண்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் நடந்த மாநாட்டில் இளைஞரணி செயலாளராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டது அவரை அடுத்த நிலைக்கு உயர்த்தியது.
தனது இளைஞரணி சகாக்கள் உடன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், மாநிலம் முழுவதும் இளைஞரணி கட்டமைப்பை வலுப்படுத்தினார். 1983ஆம் ஆண்டு தொடக்கி 2017ஆம் ஆண்டு வரை திமுகவின் இளைஞரணி செயலாளர் பொறுப்பை தன்வசமே வைத்திருந்ததன் மூலம் கட்சியின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
முதல் தோல்வி
1984ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு முதல் தேர்தலிலேயே தோல்வி அடைந்த ஸ்டாலின் 1989ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதே தொகுதியில் என்று முதல் முறையாக சட்டமன்றம் சென்றார்.
முதல் வெற்றி
1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் தோல்வி அடைந்த அவர், 1996 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். அவர் வென்ற அதே நேரத்தில் திமுகவும் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் ஆட்சி அமைத்திருந்தது, அமைச்சரவை பட்டியலில் ஸ்டாலின் பெயர் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் மேயர்
அதே ஆண்டில் நடந்த சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட்டு, சென்னை மாநகராட்சி வரலாற்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெயரை பெற்றார்.
2001ஆம் ஆண்டு மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் வென்ற அவர், அதே ஆண்டு நடந்த மேயர் தேர்தலிலும் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருந்தார்.
ஜெ. வைத்த செக்
ஸ்டாலினின் அரசியல் உச்சத்திற்கு செக் வைக்க நினைத்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, ஒரே நபர் இரு அரசு பதவிகளை வகிக்க முடியாது என சட்டத்திருத்தத்தை கொண்டு வந்ததன் மூலம் 2002ஆம் ஆண்டு சென்னை மாநகர மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் TO துணை முதலமைச்சர்
2003ஆம் ஆண்டு நடந்த திமுக பொதுக்குழுவில் கட்சியில் உட்சபட்ச பொறுப்புகளில் ஒன்றான துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்ற மு.க.ஸ்டாலின் 2006ஆம் ஆண்டு மீண்டு ஆயிரம் விளக்கில் வென்று உள்ளாட்சித்துறை அமைச்சரானார்.
1,75,493 மகளிர் சுய உதவிக் குழுக்களை நிறுவி மாநிலம் முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைப் தொடங்குவதில் முக்கியப் பங்காற்றியதுடன் ஒகேனக்கல் மற்றும் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் போன்ற பல்வேறு விரிவான குடிநீர் திட்டங்களையும் அவர் தொடங்கினார்.
2008ஆம் ஆண்டு கட்சியின் மூன்றாவது பெரிய பொறுப்பான பொருளாளராகவும், 2009ஆம் ஆண்டு துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், அப்போதைய முதல்வர் கருணாநிதியின் துறைகளையும் கூடுதலாக கவனிக்கத் தொடங்கினார்.
திமுகவின் படுதோல்வி
2011 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றாலும் திமுக படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்திருந்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலையில் திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக பொறுப்பேற்று சட்டமன்றம் சென்றார் மு.க.ஸ்டாலின்.
2016 தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்த ’நமக்கு நாமே’விடியல் மீட்பு பயணத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டாலும் அத்தேர்தலில் 98 இடங்கள் வரை வென்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பை திமுக இழந்திருந்தது.
செயல் தலைவர் TO திமுக தலைவர்
வயது மூப்பு காரணமாக அவரது தந்தை கருணாநிதியின் கட்சி பணிகளை கவனிக்க செயல் தலைவர் என்ற புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டு அவருக்கு தரப்பட்டது. 2018ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு திமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவால் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் மு.க.ஸ்டாலின்.
நாட்டையே திரும்பி பார்க்க வைத்த நாடாளுமன்றத் தேர்தல்
2019 நாடாளுமன்றத் தேர்தலை அவரது தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சந்தித்தது, இத்தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் 39 தொகுதிகளை வென்று அமோக வெற்றி பெற்றது. மேலும் 21 இடைத்தேர்தல்களில் 12 இடங்களையும் திமுக வென்றிருந்தது.
நாடு முழுவதும் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை வென்றதன் மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது திமுக
முத்துவேல் கருணாநதி ஸ்டாலின் எனும் நான்…!
2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 132 இடங்களை பிடித்து வெற்றி பெற்றதன் மூலம் திமுகவின் 10 ஆண்டுகால தொண்டர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து கட்சியை அரியணை ஏற்றினார் .
உலகையே ஆட்டிப்படைத்து வந்த கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் பலரின் பாராட்டுகளை பெற்றது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர், மகளிர் இலவச பேருந்து பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, மக்களை தேடி மருத்துவம், வேளான் நிதிநிலை அறிக்கை தாக்கல், இல்லம் தேடி கல்வி,நான் முதல்வன், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் அவரின் ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் கவனிக்கப்பட்ட திட்டங்களாக உள்ளது.
காத்திருக்கும் சவால்கள்
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் திமுகவுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி 2024 நாடாளுமன்றம் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல்களை சந்திப்பது ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் மிகப்பெரிய சவால்களாக உள்ளது.
டாபிக்ஸ்