HBD Bharathidasan : பார் போற்றும் பாவேந்தர்; புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்த தினம் இன்று
Apr 29, 2023, 06:10 AM IST
Happy Birthday Bharathidasan : புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் இன்று. இந்த நாளில் அவர் குறித்து சில தகவல்கள்.
எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே என்பது சுதந்திர உணர்வை ஊட்டக்கூடிய ஒரு பாடல். புதியதோர் உலகம் செய்வோம். கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்போம் என்று போருக்கு எதிரான தனது குரலை பாடல் வடிவில் எழுதியிருப்பார். தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத்தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர், உயிருக்கு நேர் என்று தமிழ் மொழி மீது தான் கொண்ட காதலையும், தரணியில் உள்ள அனைத்து தமிழர்களும் தமிழ் மீது வைத்திருக்க வேண்டிய பற்றையும் உணர்த்திடும் வகையில் பாடியிருப்பார்.
எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று அவர் பாடியதில் இருந்து தமிழ் அவருக்கு எவ்வளவு முக்கியமாக இருந்திருக்க முடியும் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.
புதுச்சேரியில், 1891ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி பிறந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்பிரத்தினம். இவர் மகாகவி சுப்ரமணிய பாரதியார் மீது கொண்ட பற்று காரணமாக தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டவர். தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.
தமது எழுச்சிமிக்க எழுத்துக்களால், புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என அன்புடன் அனைவராலும் அழைக்கப்பட்டவர். இவர் கவிதை வடிவில் குயில் என்ற திங்களிதழை நடத்தினார். இவரது தந்தை கனகசபை முதலியார். தாய் லட்சுமி. 1920ம் ஆண்டு பழனி அம்மையார் என்பவரை மணந்துகொண்டார்.
புதுச்சேரியில் பிறந்ததால் சிறு வயதில் பிரெஞ்சு மொழிப் பள்ளியில் படித்தார். பின்னர் தமிழ் பயின்றார். பதினாறாம் வயதில் கல்வே கல்லூரியில் தமிழ் கற்றார். இரண்டாண்டிலே கல்லூரியில் தமிழில் முதலிடம் பெற்றார். 18 வயதிலேயே கல்லூரியில் தமிழ் ஆசிரியர் ஆனார். தமிழ் மேல் கொண்ட பற்றும், ஆர்வமும் அந்தச்சிறுவயதிலே அவரை தமிழ் கற்பிப்பவராக மாற்றியது.
பாரதிதாசன் கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை என அனைத்து வடிவங்களிலும் தமிழில் எழுதினார். எனினும் கவிதைகளே அதிகம் எழுதியதால் அதிலும் குறிப்பாக புரட்சிகரமான கவிதைகளை எழுதியதால் அவர் புரட்சிக்கவிஞர் என்று அழைக்கப்பட்டார்.
அரசியலிலும் ஆர்வம் கொண்ட இவர் 1954ம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964ம் ஆண்டு இயற்கை எய்தினார். மரணத்துக்குப்பின் 5 ஆண்டுகள் கழித்து அவரது பிசிராந்தையார் நாடகத்திற்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இவரது படைப்புகள் அனைத்தும் நாட்டுமையாக்கப்பட்டுள்ளது.
தனது மானசீக குருவான சுப்ரமணிய பாரதியாரின் பாடலை தனது நண்பணின் திருமண நிகழ்வில் பாடியபோது அவர் பாரதியாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றார். பாரதியாரிடம் இருந்து பாராட்டுகள் கிடைக்கப்பெற்றதோடு மட்டுமின்றி அவரின் நட்பும் கிடைத்தது.
இன்று முதலே தனது இயற்பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார். இவரை கௌரிவிக்கும் வகையில் திருச்சியில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு அவரது பெயரை சூட்டியுள்ளது. தமிழுக்கு தொண்டாற்றிய முன்னோடிகளை தமிழர்களை என்றும் நினைவு கூறவேண்டும் என்பதால் அவரது பிறந்த நாளில் அவரது சிறப்புகளை நினைவு கூர்கிறது ஹெச்டி தமிழ்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்