Gutka Case: ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் குட்கா கொண்டு சென்ற வழக்கு.. உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து ஆணைக்கு தடை
Jul 31, 2024, 12:54 PM IST
Gutka Case: உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து மீண்டும் சபாநாயகர் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Gutka Case: தமிழக சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்றதற்காக திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து மீண்டும் சபாநாயகர் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் குட்கா விற்பனை நடைபெறுவதை சுட்டிக் காட்டும் வகையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்குள் குட்கா பொருட்களை எடுத்துச் சென்றனர்
முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து முந்தைய அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட மேல் முறையீடு வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் கடந்த திங்களன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கறிஞர்கள் வாதம்
அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓ.பன்னீர்செல்வம் அணி உருவானது. 18 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டது அப்போதைய முதல்வர் பழனிச்சாமி பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தியது போன்ற அதிரடி அரசியல் காரணங்களுக்காக ஆட்சி கவிழக் கூடாது என்பதற்காகவே ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு இந்த உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என வாதிட்டார்.
மேலும் அரசமைப்புச் சட்டப்படி பதவிக்காலம் முடிந்ததும் சட்டப்பேரவை கலைந்து விடுகிறது. அப்போதே நிலுவையில் உள்ள மசோதாக்கள் உரிமை மீறல்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் காலாவதி ஆகிவிடுகின்றன என பல்வேறு உயர் நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட்டார். அவர் தற்போதைய சட்டப்பேரவை இந்த விவகாரத்தை விசாரிக்க முடியாது. மேலும் உள்நோக்கத்துடன் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என குறிப்பிட்டார்.
முந்தைய உரிமை மீறல் குழு தலைவராக இருந்து பொள்ளாச்சி ஜெயராமன் தற்போது உரிமை மீறல் உறுப்பினராக நீடிப்பதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது பொள்ளாச்சி ஜெயராமன் தற்போதைய குழுவை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தாலும் நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கீடு செய்த நீதிபதிகள் மசோதாக்கள் காலாவதி ஆகலாம் ஆனால் உரிமை மீறல் போன்ற நடவடிக்கைகள் எப்படி காலாவதியாகும் என்ற கேள்வி எழுப்பினர் அந்த நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்றனர். இறுதியாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
சபாநாயகர் விசாரக்க உத்தரவு
அதில், தமிழ சட்டசபைக்குள் குட்கா எடுத்துச் சென்றதற்காக ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து மீண்டும் சபாநாயகர் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்