Crime: மூடநம்பிக்கையால் பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாத்தா! சித்திரை மாதம் பிறந்ததால் வெறிச்செயல்!
Jun 17, 2024, 01:56 PM IST
இந்த நிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி இரவு தாய் சங்கீதாவின் அருகே இருந்த பச்சிளம் குழந்தையை காலையில் காணவில்லை என்பதால் குடும்பத்தினர் அனைவரும் தேடி உள்ளனர். அப்போது வீட்டில் உள்ள தண்ணீர் பேரலில் துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
சித்திரை மாதத்தில் பிறந்ததால் பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தையை தாத்தாவே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயங்கொண்டம் அருகே அதிர்ச்சி சம்பவம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தில் வசிக்கும், வீரமுத்து என்பவரின் மகள் சங்கீதாவுக்கும், கும்பகோணம் அருகே வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்து உள்ளது.
சங்கீதா - பாலமுருகன் தம்பத்திக்கு கடந்த 38 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை ஒன்று பிறந்து உள்ளது. பின்னர் குழந்தை மற்றும் குழந்தையின் தாய் சங்கீதா ஆகியோர் தனது தந்தை வீடான உட்கோட்டை கிராமத்திற்கு சென்று உள்ளனர்.
குழந்தை சடலமாக மீட்பு
இந்த நிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி இரவு தாய் சங்கீதாவின் அருகே இருந்த பச்சிளம் குழந்தையை காலையில் காணவில்லை என்பதால் குடும்பத்தினர் அனைவரும் தேடி உள்ளனர். அப்போது வீட்டில் உள்ள தண்ணீர் பேரலில் துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். குழந்தையின் தாய் சங்கீதா, தாத்தா வீரமுத்து மற்றும் பாட்டி ரேவதி ஆகியோரிடம் போலீஸ் நடத்திய விசாரணை நடத்தி உள்ளனர்.
மூடநம்பிக்கையால் வெறிச்செயல்
இதன் முடிவில், சித்திரை மாதம் பிறந்த குழந்தையால் தாத்தாவின் உயிருக்கு ஆபத்து, கடன் தொல்லை அதிகரிக்கும் என்ற மூடநம்பிக்கையால் தண்னீர் பேரலில் போட்டு குழந்தையை அவரது தாத்தாவான வீரமுத்து கொலை செய்தது நாடகம் ஆடியது தெரிய வந்தது. இதனை அடுத்து வீர முத்துவை கைது செய்த ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்திரை மாதம் பிறக்கும் தலை பிள்ளையால் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும் என்ற மூடநம்பிக்கையால் பச்சிளம் குழந்தையை தாத்தாவே கொலை செய்த சம்பவம் அரியலூரில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மூடநம்பிக்கையை விதைப்பவர்கள் மீது நடவடிக்கை தேவை
இது தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன், உலகில் எளிதில் நாசமாக்கப்படும், சூறையாடப்படும் உயிர்கள் பட்டியலில் முதலிடத்தில் குழந்தைகள் உள்ளனர். தவறான மூடநம்பிக்கையால் குழந்தைகளை கொல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஜோதிட நம்பிக்கையால் குழந்தைகள் கொலை செய்யப்படுவது, நரபலி கொடுக்கப்படும் சம்பவங்கள் முன்பு நடந்து உள்ளன. நாட்டில் குழந்தை இல்லாமல் பலர் உள்ள நிலையில், பிறந்த குழந்தையை கொலை செய்யும் அளவுக்கு நபர்கள் உள்ளனர். குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வரும் சூழலில் இது போன்ற நிகழ்வுகள் கவலையை தருகின்றது. அரியலூர் போன்ற மாவட்டங்களில், தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வில் வந்த புள்ளிவிவரப்படி, ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் பின் தங்கிய மாவட்டமாக உள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இது போன்ற சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இது போன்ற மூடநம்பிக்கைகளை விதைக்கும் நபர்கள் மீது நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற மாவட்டங்களில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்த வேண்டும் என கூறி உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.