ADMK vs BJP: ’நான் பாஜகவுல சேர்ந்ததே வாட்ஸ் ஆப் பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன்!’ குமுறும் முன்னாள் எம்.எல்.ஏ!
Feb 08, 2024, 01:19 PM IST
”ADMK Ex MLA Karuppasamy: பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வெளியான நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்”
அதிமுக, காங்கிரஸ், திமுகவை சேர்ந்த 15 முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பி ஆகியோர் நேற்றைய தினம் டெல்லியில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.
இந்த செய்தி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. அரசியலில் இருந்து ஓய்வு பெற்றவர்களை அழைத்து கட்சியில் சேர்த்துள்ளதாக அதிமுக ஆதரவாளர்கள் இணைய தளத்தில் பாஜகவை விமர்சித்து வந்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு பாஜகவினர் நேற்றைய தினம் ‘அண்ணாமலை தட்டி தூக்கிய எம்.எல்.ஏக்கள்’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த செய்தியில், 15 எம்.எல்.ஏக்கள் யார், அவர்கள் எந்த தொகுதியில் எம்.எல்.ஏக்களாக இருந்தனர் என்ற விவரம் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் அவிநாசி தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவான கருப்பசாமியின் பெயரும் இடம்பெற்று இருந்தது. பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வெளியான நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “எம்ஜிஆர் வழிக்காட்டுதலாலும், புரட்சித் தலைவர் அம்மாவின் வழிகாட்டுதாலும் 2011ஆம் ஆண்டு அவினாசி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 62 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றேன். அம்மா அவர்கள் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்தார்கள். அம்மா அவர்களுக்கு பிறகு அண்ணன் எடப்பாடியார் அவர்கள் வழிகாட்டுதலோடு பல்வேறு பணிகளை செய்து வருகிறேன். ஆனால் நான் பாஜகவில் இணைந்துவிட்டதாக பொய்யான தகவல்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். என்னுடைய உயிர் உள்ள வரையில் அதிமுகவில் தொடர்ந்து பணிபுரிவேன், வேற இயக்கத்திற்கு செல்லமாடேன்” என கூறி உள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமியின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
டாபிக்ஸ்