Independence day:தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக்கொடியை தயாரித்த தமிழர்
Aug 15, 2022, 10:52 AM IST
நாடு விடுதலை பெற்றபின் தில்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி ஒரு தமிழரால் தயாரிக்கப்பட்டது என்று பெருமை பெற்றதாகும்.
சென்னை : நாடு சுதந்திரம் அடைந்தவுடன், தில்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் ஏற்றிய தேசியக்கொடி தமிழகத்தில் தயாரிக்ப்பட்டதாகும்.
செங்கோட்டையில் பட்டோளி வீசிப் பறந்த இந்த முதல் தேசியக்கொடி, குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தவுடன் நாடு முழுதும் ஏற்ற, அதிகளவு தேசியக்கொடி தேவைப்பட்டது. இதற்காக பல்வேறு நிறுவனங்களில் 'டெண்டர்' கோரப்பட்டது.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனுாரை சேர்ந்த வெங்கடாசலம், 'இந்துஸ்தான் லுங்கி கம்பெனி' என்ற கைத்தறி நிறுவனத்தை நடத்தி வந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், 10 ஆண்டுகள் குடியாத்தம் நகராட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
ஒன்றிய அரசின் டெண்டரைப் பார்த்துவிட்டு தன்னால் அதிகளவு கைத்தறி துணியிலான தேசியக்கொடி தயாரித்து கொடுப்பதாக கடிதம் அனுப்பினார். அப்போதைய சென்னை மாகாண அரசு அதிகாரிகள், குடியாத்தம் வந்து அவரது கைத்தறி ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தை ஆய்வு செய்து திருப்தியடைந்தபின்னர் தேசியக் கொடியைத் தயாரிப்பதற்கு அனுமதி தந்தனர்.
இதையடுத்து ஆந்திரா மாநிலம், சித்துார் பிங்கலி வெங்கையா வடிவமைத்த, 12 அடி அகலம், 18 அடி நீளத்தில் கைத்தறி துணியிலான மூன்று தேசியக்கொடிகளை, வெங்கடாசலம் அவர் மனைவி முனிரத்தினம் ஆகியோர் தயாரித்து அனுப்பினர்.
அதில் ஒன்று, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று தில்லி செங்கோட்டையிலும், மற்றொன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் ஏற்றப்பட்டன. மேலும், குடியாத்தம் நெசவாளர்களுடன் இணைந்து, இரண்டு கோடி தேசியக்கொடிகளை கைத்தறியில் தயாரித்து, நாட்டின் பல பகுதிகளுக்கு அனுப்பினர்.
இந்தளவுக்கு விரைவாக கோடிக்கணக்கில் தேசியக் கொடியைத் தயாரித்த வெங்கடாசலத்தைப் பாராட்டி அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஒரு கடிதத்தை அனுப்பினார். தேசப்பற்று நிறைந்த வெங்கடாசலத்தின் குடும்பத்தினர் அந்தக் கடிதத்தை இன்றும் பொக்கிஷம்போல் பாதுகாத்து வருகின்றனர்.
டாபிக்ஸ்