ஆணவக் கொலை: மகன், தாய் கொலை - மருமகளை விரட்டி விரட்டி வெட்டிய மாமனார் கைது!
Apr 16, 2023, 02:35 PM IST
Krishnagiri Honour Killing: கிருஷ்ணகிரியில் தனது தாயையும் காதல் திருமணம் செய்த மகனையும் கொடூரமாக கொலை செய்தவர் தண்டபாணி கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த மகன் மற்றும் தாயை கொடூரமாக கொலை செய்த தந்தை தண்டபாணி கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே உத்தங்கரையில் அருகே கருமாடாபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மகன் சுபாஷ். பட்டதாரியான சுபாஷ் திருப்பூரில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன் தன்னுடன் வேலை பார்த்து வரும் அனுஷா என்ற மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.
இந்த திருமணத்தை பொருத்தமட்டில் அனுஷா மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சுபாஷின் தந்தை தண்டபாணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தண்டபாணி கடந்த 3 மாதமாக கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சுபாஷ் மற்றும் அனுஷா ஆகியோர் ஊத்தங்கரை அருகே உள்ள தந்தை வீட்டிற்கு வந்துள்ளனர். இதையடுத்து இரவு வழக்கம்போல் தூங்கி கொண்டிருந்த தனது மகன் சுபாஷ், மருமகள் அனுஷா மற்றும் தனது தாயை சுபாஷின் தந்தை தண்டபாணி கொடூரமாக கத்தியால் வெட்டி உள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சுபாஷ் மற்றும் அவரது பாட்டி கண்ணம்மாள் ஆகியோர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுபாஷின் மனைவி அனுஷா உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை டிஎஸ்பி சம்பவ இடத்திற்கு வந்து சுபாஷ் கண்ணம்மாள் ஆகியோரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தண்டபாணி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி, கொலை உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான தண்டபாணி காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் வேறு சாதி பெண்ணை திருமணம் செய்த சுபாஷை வெட்டிக்கொலை செய்த தண்டபாணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டாபிக்ஸ்