Munusamy Murder: முனுசாமி கொலை - போலீசாரும் உடந்தையா?குடும்பத்தினர் பகீர் தகவல்!
Dec 11, 2022, 01:57 PM IST
முனுசாமி கொலை வழக்கில் போலீசாரும் உடந்தையாக இருப்பதாக முனுசாமி குடும்பத்தார் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் கொலையாளிகள் 5 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
சென்னை: புளியந்தோப்பு ஏ.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. 37 வயதான இவர் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 3 ஆம் தேதி இரவு 10 மணி அளவில் முனுசாமியை அவரது நண்பர்கள் சிலர் வந்து அழைத்துச் சென்றனர். பெரியமேடு மூர்மார்க்கெட்டில் கோர்ட்டு கட்டிடத்தின் கீழ் செயல்பட்டு வரும் காம்ப்ளக்ஸ் பகுதிக்கு முனுசாமியை அழைத்துச் சென்றனர்.
அங்குள்ள 2ஆவது மாடியில் முனுசாமியை ஓட ஓட சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.கொலை செய்யப்பட்ட முனுசாமிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவரது மகன் பிறந்தநாள் அன்றே முனுசாமி கொலை செய்யப்பட்டுள்ளார். இது அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து கொலையாளிகள் யார் என்பதை கண்டறியும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கையில் இறங்கினர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட டவுன் போலீஸார் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கினர். ஆட்டோவில் 5 பேர் இருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை கொடுங்கையூர் அஷ்ரப்அலி (28), வியாசர்பாடி மணிகண்டன்(27), புளியந்தோப்பு அப்பாஸ் (28), சூளை கிஷோர் (29), அல்லிக்குளம் ஆபிரகாம் (19) என்பதும்,அல்லிக்குளம் வணிக வளாகத்தில் முனுசாமியை கொலை செய்துவிட்டு தப்பியது இவர்கள்தான் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேரும் பெரியமேடு காவல் நிலையஆய்வாளர் தீபக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் அல்லிக்குளத்தில் உள்ள செல்போன் கடையில் அஷ்ரப் அலி, அப்பாஸ் ஆகியோர் வேலைபார்த்துள்ளனர். அவர்கள் திருட்டுசெல்போன்களை வாங்கி விற்பதுபற்றி முனுசாமி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
எனவே,இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் முனுசாமி கொலை செய்யப்பட்டிருப்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக போலீசாருக்கு முனுசாமி தொடர்ந்து தகவல் தெரிவித்து வந்ததால் இந்த கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், முனுசாமி தான் கஞ்சா விறபனை குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார் என்பது எதிராளிகளுக்கு எப்படி தெரிந்தது. ரகசியமாக பாதுகாக்கபட வேண்டிய ஒரு தகவல் எப்படி அவர்களுக்கு தெரிந்தது என முனுசாமியின் குடும்பத்தார் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதில் போலீசாரும் உடந்தையாக இருப்பதாக குடும்பத்தார் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் கொலை நடந்த இரண்டாவது தளத்தில் இரண்டு அதிகாரிகள் இருந்துள்ளனர். காவல் நிலையத்தில் இந்த கொலை குறித்து கேட்டதற்கு போலீசில் தகவல் சொல்லியிருப்பார் அதனால் தான் கொலை செய்துள்ளனர் என கூறினார்.
இந்த கொலைவழக்கில் போலீசார் கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்து குடும்பத்தை நாசம் பன்னிவிட்டதாக முனுசாமியின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொலையாளிகள் 5 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும், முதல்வர் இதில் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.