Fact Check: ஜி.யு.போப் எழுதிய புத்தகத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுகிறாரா?– பரவும் புகைப்படத்தின் உண்மை என்ன?
May 29, 2024, 12:38 PM IST
Fact Check ஜி.யு.போப் எழுதிய புத்தக்கத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுவதாக புகைப்படம் ஒன்றை தினமலர் நாளிதழ் பகிர்ந்திருந்தது. அந்த அட்டைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதன் உண்மை என்ன என்பது குறித்து இதில் காண்போம்.
ஜி.யு.போப் எழுதிய புத்தக்கத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுவதாக புகைப்படம் ஒன்றை தினமலர் நாளேட்டின் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டது. அந்த பதிவில் இடம்பெற்ற புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். இந்த செய்தியின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் செக்கர்ஸ் உண்மை சரிபார்ப்பு நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
சர்ச்சையான திருவள்ளுவர் புகைப்படம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் தினத்தன்று காவி உடையுடன் உள்ள வள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து திருவள்ளுவர் நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையானது. இதற்கு அரசியல் கட்சிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை ஆளுநர் மாளிகையில் கடந்த 24.05.2024 அன்று நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் (வைகாசி அனுஷம் வள்ளுவர் திருநாள்) விழாவுக்கு தலைமை தாங்கினார்.
காவி நிறத்தில் திருவள்ளுவர் புகைப்படம்
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திருவள்ளுவரின் பக்தர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கான அழைப்பிதழ் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்திய திருவள்ளுவரின் படங்களும் காவி நிறத்தில் இருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜி.யு.போப் எழுதிய புத்தக்கத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுவதாக புகைப்படம் ஒன்றை தினமலர் நாளேட்டின் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டது. அந்த அட்டைப்படத்தைப் பலரும் பகிர்ந்தனர்.
உண்மைத் தன்மை என்ன?
சமூக ஊடகங்களில் பரவி வந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்தது. அதன்படி முதலாவதாக, வைரலாகும் திருக்குறள் அட்டைப்படத்தில் ஜி.யு. போப் என்கிற பெயர் இடம்பெற்றிருந்த நிலையில் அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உள்ளாக்கி தேடுதலை துவங்கியது. அதன்முடிவில், Kobo என்கிற இணையதளத்தில் ஜியு போப் பெயர் இடம்பெற்றுள்ள இப்புத்தக அட்டைப்படம் இருப்பதை நியூஸ் செக்கர் கண்டுபிடித்தது. ஆனால், அட்டைப்படத்தில் ஜியு போப் பெயர் பொருந்தாத வகையில் இடம்பெற்றிருந்தது. எனவே மேலும் குறிப்பிட்ட புகைப்படம் குறித்து ஆராய்ந்தது.
அதன்முடிவில், சத்குரு சிவாய சுப்ரமணிய சுவாமி தோற்றுவித்த ஹிமாலயன் அகாடமியின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் இடம்பெற்றுள்ள இப்புத்தகத்தை எழுதியவர் பெயர் “சத்குரு சிவாய சுப்ரமணிய சுவாமி ” என்றே இடம் பெற்றிருந்தது. எனவே, இப்புத்தகத்தின் முழுமையான பதிப்பை நியூஸ் செக்கர் . நம் தேடலின் முடிவில் ஹிமாலயன் அகாடமி இணையதளப்பக்கத்திலேயே இதன் PDF பதிப்பு கிடைத்தது.
அதன் பதிப்புரை பக்கத்தில் “The cover art and the image of lord murugan opposite the title page are by Thiru. S. Rajam of Chennai.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஓவியத்தில் உள்ள ஓவியரின் கையெழுத்தும் ”S Rajam – A Rare Gem Indeed ” என்கிற பெயரில் சுந்தரம் ராஜம் வரைந்த ஓவியங்களின் தொகுப்பு இடம்பெற்றுள்ள பக்கத்தில் உள்ள ஓவியங்களில் உள்ள கையெழுத்தும் ஒன்றே என்பதையும் அறிய முடிந்தது.
எனவே, ஓவியர் எஸ் ராஜமின் மருமகனும், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கத்தை நிர்வகிப்பவருமான வி.எஸ்.ரமணாவைத் தொடர்பு கொண்டு நியூஸ் செக்கர் பேசியபோது, குறிப்பிட்ட அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் சுந்தரம் ராஜம் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். மேலும், HIMALAYAN ACADEMY MUSEUM OF SPIRITUAL ART பக்கத்தில் எஸ்.ராஜம் வரைந்த தேர்ந்தெடுத்த 108 திருக்குறள்களின் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. எஸ்.ராஜம் 1919ஆம் ஆண்டு பிறந்து 2010ஆம் ஆண்டு மறைந்தவர் என்பதும், ஜியு போப் வாழ்ந்த காலகட்டம் அதற்கும் முந்தையது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், சிவாய சுப்ரமணிய சுவாமிகள் எழுதிய புத்தகத்தில் அவருக்கு முன்பாக திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்தவர்கள் என்கிற Resources பகுதியில்தான் ஜியு போப் பெயர் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முடிவு என்ன?
ஜியு போப் எழுதிய புத்தகத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுவதாக பரவிய செய்தி தவறானது என்பது ஆதாரங்களின் படி தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு
இந்தச் செய்தி முதலில் newschecker இணையதளத்தில் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்