MGR 35th Death Anniversary : தலைவன் என்றால் எம்ஜிஆர் -இபிஎஸ், ஓபிஎஸ் டுவிட்!
Dec 24, 2022, 09:36 AM IST
எம்ஜிஆர் 35ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் நினைவு கூர்ந்துள்ளனர்.
சினிமாவில் வெற்றி நாயகனாக திகழ்ந்தவர் எம்ஜிஆர் உழைக்கும் மக்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்தார்.1936 இல் வெளியான சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமானார்.
அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். பின்னர் அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக்கழக கட்சியில் இணைந்து பணியாற்றினார்.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராக பதவியேற்ற கருணாநிதியிடம் கருத்து வேறுபாடு ஏற்படவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தனிப்பெரும் வெற்றி பெற்றார். தமிழகத்தின் முதல்வராக பத்து ஆண்டுகள் பதவி வகித்தார்.
எம்ஜிஆர் கடந்த 1987, டிசம்பர் 24ஆம் தேதி இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவரது உடல் மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே வைக்கப்பட்டு நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. தற்போது அந்த இடம் எம்ஜிஆர் நினைவிடம் என அழைக்கப்படுகிறது..
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 35ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. எம்ஜிஆரின் நினைவு தினத்தை ஒட்டி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரின் நினைவிடத்தில் இன்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ,அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இன்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.
எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். அவரை தொடர்ந்து காலை 11 மணிக்கு ஓ.பன்னீர்செல்வமும், பகல் 12 மணிக்கு சசிகலா தரப்பினரும், பிற்பகல் 12.30 மணியளவில் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் எம்ஜிஆர் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர். இதன் காரணமாக எம்ஜிஆர் நினைவிடத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பொதுமக்களும் அஞ்சலி செலுத்த கூட்டமாக வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் எம்ஜிஆரின் 35ஆவது நினைவு தினமான இன்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில், மண் குடிசையில் பிறந்து, மக்கள் தலைவனாகி, மன்னனாக மகுடம் சூடி, சின்னம் என்றால் இரட்டை இலை, தலைவன் என்றால் எம்ஜிஆர் என கடைக்கோடி மக்களையும் தனது செயல்பாட்டால் ஈர்த்து, அஇஅதிமுகவிற்கு வெற்றியை மட்டுமே பரிசாகக் கொடுத்த புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களை போற்றி வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், மக்கள் இதயத்தில் நீக்கமற வாழ்ந்து வரும் இதயக்கனி,அவர் வகுத்து தந்த பாதையில் பயணிப்பதையே பெருமையென கொண்டு, எம்.ஜி.ஆர்-க்கு எங்கள் புகழஞ்சலி" என்று பதிவிட்டுள்ளார்.