English Teacher: அரசுப்பள்ளி ஆங்கில ஆசிரியர்களுக்கு பெங்களூரில் பயிற்சி
Feb 25, 2023, 02:01 PM IST
அரசுப்பள்ளிகளில் உள்ள ஆங்கில ஆசிரியர்களுக்கு பெங்களூரில் மார்ச் மாதம் முழுவதும் ஒரு மாதத்திற்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும். அதற்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு பெங்களூரில் ஒரு மாத மொழிப்பயிற்சி வழங்கப்படவுள்ளதால், தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து பட்டியல் அனுப்பும்படி முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் க. அறிவொளி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கற்றலை மேம்படுத்தும் நோக்கத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர வெளி முகமைகள் மூலமும் அவ்வப்போது ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆங்கிலப்பாட ஆசிரியர்களுக்கு பெங்களூரில் உள்ள தென்னிந்தயாவுக்கான மண்டல ஆங்கில மொழிப் பயிற்சி நிறுவனம் மூலம் சான்றிதழ் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
அதாவது, இந்தப் பயிற்சி வகுப்புகள் மார்ச் 1 முதல் 30ம் தேதி வரை 30 நாட்கள் நடத்தப்படும். பயிற்சியை முடிக்கும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதில் கலந்துகொள்வதற்காக 75 ஆங்கில பாட ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும்.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, வேலூர், தஞ்சாவூர், விழுப்புரம், ஈரோடு, திருவண்ணாமலை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய 13 மாவட்டங்களில் இருந்து 30 பேர், எஞ்சிய பகுதிகளிலிருந்து கல்வி மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 45 பேர் என மொத்தம் 75 பேர்களை தேர்வு செய்து பட்டியலை இயக்குநரகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்