ED Raid In Chennai: எஸ்.டி. கொரியர் ஆபிஸ் உட்பட 10க்கும் மேலான இடங்களில் ரெய்டு - பின்னணி என்ன?
Mar 14, 2024, 05:37 PM IST
ED Raid In Chennai: சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
ED Raid In Chennai: சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்.டி. கொரியர் தலைமை அலுவலம் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் எஸ்.டி. கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக, சென்னையில் பல்லாவரத்தில் உள்ள எஸ்.டி.கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன.
மேலும், தியாகராய நகர், திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் பகுதிகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
அதேபோல், சென்னை - தியாகராய நகர் பசுல்லா சாலையில் நடந்து வருகிறது, நரேஷ் என்பவர் நடத்தும் சாய் சுக்கிரன் என்ற பெயின்ட் அடிக்கும் நிறுவனம். அவரது நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அலுவலர்கள் ரெய்டு நடத்தி வருகின்றனர். சட்டவிரோதப் பணப்பரிமாற்றப் புகார்கள் எழுந்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று இருக்கிறது. துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சென்னையில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், கடந்த மார்ச் 9ஆம் தேதி சென்னை ஆர்.ஏ. புரத்தில் வசித்த கரூரை சார்ந்த அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் வீடு மற்றும் வேப்பேரி, மயிலாப்பூர் பகுதிகளில் கட்டுமானத் தொழிலதிபர்கள் வீடுகளில் இந்த சோதனையானது நடைபெற்றது.
அதேபோல், விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் சென்னை தேனாம்பேட்டை இல்லத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. ஆதவ் அர்ஜூனா, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆவார். கடந்த 2023ஆம் ஆண்டு வாக்கில் மார்ட்டின் தொடர்புடைய நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது.
அமலாக்கத்துறை என்றால் என்ன? வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனையை மேலாண்மை செய்வது, கணக்கில் வராத பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவது, தப்பியோடிய வரி ஏய்ப்பு செய்த குற்றவாளியைப் பிடிப்பது போன்ற பணிகளை செய்து வரும் இந்திய அரசின் ஒரு துறை ஆகும். டெல்லி மும்பை, கொல்கத்தா, சண்டிகர், அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கொச்சி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஆக்ரா, ஸ்ரீநகர் ஆகிய பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. சுருக்கமாக சொன்னால், வருவாய்த்துறையின் கீழ் செயல்படும், பணமோசடியைத் தடுக்க உதவும் புலனாய்வு மற்றும் சட்ட அமைப்பு, அமலாக்கத் துறை.
கடந்த மாதம் அமலாக்கத்துறை செய்த முக்கிய நடவடிக்கைகள்: தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு மாவட்டங்களில் மணல் குவாரிகளை கடந்த சில மாதங்களாக அமலாக்கத்துறை ஆய்வு செய்தது.
இந்த சோதனைகளின் அடிப்படையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும்; அதன் அடிப்படையில் மணல் குவாரிகள் தொடர்பாக பன்னீர்செல்வம் கரிகாலன் மற்றும் பிறருக்குச் சொந்தமான 35 வங்கிகளில் இருந்து ரூ. 2 கோடியே 25 லட்சம் தொடர்பான பணம் முடக்கப்பட்டுள்ளதாக, அதேபோல் அசையும் சொத்துகள் மற்றும் அசையாச் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை பிப்ரவரி மாதம் தகவல் தெரியப்படுத்தியது.
பல்வேறு சோதனையின் அடிப்படையில் தோராயமாக ரூ. 130 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும்; பல்வேறு விவகாரங்களில் முறைகேடு நடைபெற்றதுள்ளதாகவும் சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் இந்த சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
முன்னதாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கடந்த 2023ஆம் ஆண்டு, ஜூன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9