தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஆப்பரேஷன் கள்ளச் சாராயம் 2.0 நடத்தப்படுமா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

ஆப்பரேஷன் கள்ளச் சாராயம் 2.0 நடத்தப்படுமா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

Karthikeyan S HT Tamil

May 20, 2022, 09:46 PM IST

google News
தமிழகத்தில் கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை: கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களில் இருந்து மக்களைக் காக்க காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஆப்பரேஷன் கஞ்சா 2.0 நடத்தப்படுவது போல், ஆப்பரேஷன் கள்ளச் சாராயம் 2.0 நடத்தப்படுமா? என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஓராண்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, ஆளும் தி.மு.க-வைச் சேர்ந்தவர்களின் துணையோடு நடப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. குறிப்பாக, ஜெயலலிதாவின் அரசால் முற்றிலும் ஒழிக்கப்பட்ட கள்ளச் சாராயம் தற்போதைய இந்த அரசில் ஆறாய் ஓடுகிறது. போலி மதுபானங்கள், வெளி மாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட மதுபானங்கள், சந்துக் கடைகள் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் தாராளமாக விற்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதாவின் அரசில் சுதந்திரமாக செயல்பட்ட தமிழக காவல் துறையின் கைகள், ஆளும் தி.மு.க-வினரால் கட்டப்பட்டுள்ளதால், இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அதிகமாக பயணிக்கும் மெரினா கடற்கரை சாலையில், காவல் துறைத் தலைவரான டி.ஜி.பி. அலுவலகம் எதிரில் உள்ள கடற்கரை மணலில் எண்ணிலடங்கா கள்ளச் சாராய ஊரல்கள், போலி மது பாட்டில்கள் புதைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வெட்கக்கேடானது. இது, மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

கடற்கரை மணலில் புதைக்கப்பட்டிருக்கும் கள்ளச் சாராய ஊரல்கள், போலி மது பாட்டில்களைத் தோண்டி எடுக்கும் செய்தியினை ஊடகங்களில் பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது. காவல் துறைக்கு தெரியாமல் இவ்வளவும் புதைத்து வைக்க முடியாது. இது தொடர்பாக, ஒன்றிரண்டு பெண்களை கைது செய்து, கணக்கு காட்டி பிரச்னையின் தீவிரத்தை மூடி மறைக்க காவல் துறை முயல்கிறதோ? என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. சென்னை முதல் குமரி வரை கள்ளச் சாராய விற்பனை ஒரு சில காவல் துறையினர் மற்றும் ஆளும் கட்சியினர் ஆதரவோடு கனஜோராக நடைபெறுகிறது. தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானங்களின் விலை தாறுமாறாக ஏற்றப்பட்டுள்ளது. இதனால் குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மலிவு விலை கள்ளச் சாராயத்தை நாடுகிறார்கள்.

இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், இந்த விடியா ஆட்சியில் கள்ளச் சாராய மரணங்கள் ஏற்படும் என்று தாய்மார்கள் அஞ்சுகிறார்கள். தமிழகத்தில் கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், அப்பாவி. மக்களின் கள்ளச் சாராய மரணங்களைத் தடுக்க தமிழக தாய்மார்களுடன் இணைந்து வீதியில் இறங்கிப் போராடுவோம் என்று இந்த விடியா அரசை எச்சரிக்கிறேன். 

மக்களின் உயிரையும், உடமையையும் காக்க அ.தி.மு.க எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். எனவே, ஜெயலலிதாவின் அரசின், ஆட்சியில் காவல் துறை எப்படி சுதந்திரமாக செயல்பட்டதோ, அதுபோல் இந்த விடியா அரசும் கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களில் இருந்து மக்களைக் காக்க காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன். " இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி