ADMK Vs DMK:’குடியாத்தம் குமரன் வீடியோவை ED விசாரிக்க வேண்டும்!’ விளாசும் டி.ஜெயக்குமார்!
Nov 26, 2023, 05:35 PM IST
”40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என தமிழக முதலமைச்சர் பேசியிருப்பது ஒரு கானல் நீர் போன்றது”
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பூத் கமிட்டி பணிகளை அதிமுக தீவிரப்படுத்தி வருகிறது. சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிய பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,
தமிழ்நாட்டின் நிதிநிலை மோசமாக இருப்பதாக கூறி பல்வேறு நிதி சார்ந்த பணிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசு, 42 கோடி மதிப்பீட்டில் சென்னையில் ஃபார்முலா ரேசிங் சர்க்கியூட்F-4 என்ற கார் பந்தயத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
தமிழகத்தில் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதன் மூலம், மாவட்ட ஆட்சியர்களும், அதிகாரிகளும் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றால் இது போன்ற அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். திமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட குடியாத்தம் குமரன் வெளியிட்ட காணொலியை வைத்து அமலாக்கத்துறை உரிய விசாரணையை நடத்த வேண்டும் என டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என தமிழக முதலமைச்சர் பேசியிருப்பது ஒரு கானல் நீர் போன்றது என்றும், மக்கள் மீது கடுமையான அதிருப்தியை சம்பாதித்து இருக்கும் திமுக இதுபோன்று பகல் கனவுகளை காண வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்
நடிகர் சங்கம் தோற்றுவிக்க காரணமாக இருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவு நாளில் கலைஞர் நூற்றாண்டு விழாவை நடிகர் சங்கம் நடத்துவதற்கு ஆட்சியாளர்களின் நிர்பந்தமே காரணம் என்ற அவர், வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் ஏற்பட்டு உள்ளது என டி.ஜெயக்குமார் கூறினார்.