DMK vs BJP: ’6 ஆயிரம் மோடி பணமா?’ வாழை பழ காமெடியை சுட்டிக்காட்டி விளாசும் முரசொலி!
Jan 02, 2024, 08:30 AM IST
”தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில நிதி ஆதாரங்களும் சுரண்டப்பட்டு சுருட்டப்படுகின்றன என்பது மட்டுமே உண்மை ஆகும். இத்தகைய கார்ப்பரேட் முதலைகள் வேண்டுமானால், ‘இது மோடி பணம்’ என்று சொல்லிக் கொள்ளலாம்”
தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு 6000 ரூபாய் கொடுத்த நிலையில். இது மோடி பணம் தான் என்று வஞ்சகப் பொய்யை அவிழ்த்து விடத் தொடங்கிவிட்டார்கள் என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு வரும் நிலையில் முரசொலி நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், கவுண்டமணி -–- செந்தில் வாழைப்பழக் காமெடியைப் பார்த்தது தமிழ்நாடு.
‘ஒரு பழம் இங்க இருக்கு... இன்னொரு பழம் எங்க?’ என்று கேட்பார் கவுண்டமணி.
‘அது தான்ணே இது’ என்பார் செந்தில்.
ஒன்றிய அரசிடம் நிதி கேட்டால், ‘நீங்கள் செலவு செய்யும் பணம் எல்லாம் எங்கள் பணம் தான்’ என்று சொல்கிறார்கள். மாநில அரசுகளிடம் இருந்து பணத்தை வசூலித்து எடுத்துச் செல்லும் ஒன்றிய அரசு, மாநில அரசுக்கு அள்ளியும் தருவது இல்லை, கிள்ளியும் தருவது இல்லை. ஆனால் எள்ளி மட்டும் நகையாடுகிறது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் முதலமைச்சர் அவர்கள் கோரி உள்ளார்கள். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக அளவிடப்படவில்லை. எனவே, அவசர நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் பிரதமரிடம் கோரியுள்ளார்கள். ஆக மொத்தம் 21 ஆயிரத்து 692 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை அவர்கள் தரத் தயாராக இல்லை.
அதற்காக மக்களை காத்திருக்க வைக்க முடியுமா? சென்னை, காஞ்சி புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாயை குடும்ப அட்டை அடிப்படையில் தரச் சொல்லி விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதற்கு மட்டும் 1,486 கோடி ரூபாயை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
புயல் மழையால் சாலைகள், பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள், டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், பழுதடைந்த துணை மின் நிலையங்கள் குடிநீர் தொட்டிகள், தெரு விளக்குகள், கிராமச் சாலைகள் ஆகியவற்றை சீர் செய்திட வேண்டும். அதற்கும் நிதி அதிகம் தேவைப்படுகிறது. பொதுமக்களின் இழப்புகளுக்கு நிதி வழங்க வேண்டும். இவை எதையும் மனதில் கொள்ளவில்லை ஒன்றிய அரசு. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் கொடுத்தது, இது மோடி பணம் தான் என்று வஞ்சகப் பொய்யை அவிழ்த்து விடத் தொடங்கிவிட்டார்கள்.
24 லட்சம் பேருக்குக் கொடுங்கள் என்று ரூ.1,486 கோடியை ஒன்றிய அரசு கொடுத்திருந்தால்தான் அது மோடி பணம். தமிழ்நாடு அரசு தனது கருவூலத்தில் இருந்து எடுத்துத் தரும் பணம் எப்படி மோடி பணம் ஆகும்? இது மோசடித் தனம் அல்லவா?
நமக்கு முதலில் ரூ.450 கோடியும், பின்னர் ரூ.450 கோடியும் ஒன்றிய அரசு வழங்கி இருக்கிறது. இவை இரண்டும் மிக்ஜாம் புயல் பாதிப்புகளுக்காகத் தரப்பட்ட சிறப்பு நிதி அல்ல. வழக்கமாக பேரிடர் காலங்களில் தருவதற்காக வைத்திருக்கும் நிதியில் இருந்து எடுத்துத் தந்துள்ளார்கள். இவை ஏற்கனவே ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் நிதி தானே தவிர –- டிசம்பர்4,17,18 ஆகிய தேதிகளில், ஏற்பட்ட பாதிப்புகளுக்காகத் தரப்பட்ட நிதி அல்ல. அல்ல.
2015ஆம் ஆண்டு முதல் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய மொத்த தொகை ரூ.1,27,655.80 கோடி.
ஒன்றிய அரசால் ரூ.5,884.49 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய தொகையில் 4.61 விழுக்காடு மட்டுமே ஆகும். நாம் கொடுக்கும் பணத்தை கார்பரேட் கம்பெனிகளுக்கு கடன் கொடுத்து அவர்களுக்கு திவால் நோட்டீஸும் கொடுத்து அழகு பார்ப்பதுதான் பா.ஜ.க.வுக்கு தெரிந்த ஒரே வேலை. இதை தலையாட்டிக் கொண்டு செய்வதற்காகத் தான் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக ஆக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில நிதி ஆதாரங்களும் சுரண்டப்பட்டு சுருட்டப்படுகின்றன என்பது மட்டுமே உண்மை ஆகும். இத்தகைய கார்ப்பரேட் முதலைகள் வேண்டுமானால், ‘இது மோடி பணம்’ என்று சொல்லிக் கொள்ளலாம்.
வாழைப்பழக் காமெடி வந்த படம் ‘கரகாட்டக்காரன்’. இவர்களோ பித்தலாட்டக்காரர்கள்! என முரசொலி காட்டமாக விமர்சித்துள்ளது.