Nellai Mayor Election:நெல்லை மேயர் தேர்தல்; தலைமை நிறுத்திய வேட்பாளருக்கு எதிராக வாக்களித்த கவுன்சிலர்கள்! நடந்தது என்ன?
Aug 05, 2024, 03:51 PM IST
Nellai Mayor Election: நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக திமுகவைச் சேர்ந்த கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மநகராட்சி மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்யப்பட்டதை அடுத்து, புதிய மேயராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராமகிருஷ்ணனுக்கு வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை மாநகராட்சி ஆணையர் வழங்கினார்.
நெல்லை மாநகராட்சி மேயர் ராஜினாமா
நெல்லை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் இருந்தார். அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து அவருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் பலமுறை மாநகராட்சி கூட்டங்களை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். இது தொடர்பாக முதல்வர் உத்தரவின்பேரில் அமைச்சர் தங்கம் தென்னரசு பஞ்சாயத்து செய்தும் திமுக கவுன்சிலர்கள் பிடிவாதமாக இருந்தனா்.
மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
தொடர்ந்து மோதல் போக்கு நீடித்த நிலையில், திமுக கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மாநகராட்சி ஆணையாிடம் கடிதம் அளித்தனர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் திமுக கவுன்சிலர்களை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினர். ஆனால், தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் இடையே மோதல் போக்கு நிலவிய நிலையில், மேயராக இருந்த சரவணனை திமுக தலைமை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தது. அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேயர் வேட்பாளரான கிட்டு என்கிற ராமகிருஷ்ணன்
இந்த நிலையில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு புதிய மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் என்கிற கிட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற திமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து கிட்டுவின் பெயர் அறிவிக்கப்பட்டது.
மேயரை தேர்வு செய்ய மறைமுக தேர்தல்
இந்த நிலையில், நெல்லை மாநகராட்சி மேயருக்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஆக.05) நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் மற்றும் திமுகவின் அதிருப்தி கவுன்சிலர் பவுல்ராஜ் போட்டியிட்டனர். மறைமுக தேர்தலில் முதலில் 53 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் மேயருக்கு அனுமதி மறுப்பு
முன்னாள் மேயராக இருந்த சரவணன் பிற்பகல் 12.10 மணிக்கு வாக்களிப்பதற்காக வந்தார். அப்போது அவரை அதிகாரிகள் உள்ளே அனுப்ப முடியாது என தெரிவித்தனர். தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் சில நிமிடமே உள்ள நிலையில் காலதாமதமாக வந்ததால் அனுமதிக்க முடியாது எனக் கூறி முன்னாள் மேயர் சரவணனை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சுகபுத்ராவிடம் ஆலோசனை செய்த பிறகு அவர் அனுமதிக்கப்பட்டார்.
நெல்லை மேயராக ராமகிருஷ்ணன் தேர்வு..
திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 மாமன்ற உறுப்பினர்களில் 54 பேர் மறைமுக தேர்தலில் பங்கேற்றனர். அதிமுக மாமன்ற உறுப்பினர் ஜெகநாதன் மட்டும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதைத்தொடர்ந்து தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஒரு செல்லாத வாக்கு பதிவாகியது. திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் 50 இடங்களில் திமுக கூட்டணி கட்சியின் கவுன்சிலர்கள் வெற்றி பெற்றிருந்த நிலையில் ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்