kallakurichi hooch tragedy: கள்ளக்குறிச்சி விவகாரம்! 1 கோடி கேட்டு ராமதாஸ், அன்புமணிக்கு திமுக எம்.எல்.ஏக்கள் நோட்டீஸ்!
Jun 24, 2024, 02:25 PM IST
kallakurichi hooch tragedy: தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களின் வாயிலாகவும் தங்களிடமும் கள்ளக்குறிச்சி மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்; தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குத் தலா ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என நோட்டீஸ்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில், அவதூறு பரப்பியதாக கூறி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது திமுக எம்.எல்.ஏக்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து இதுவரை 58 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு
இந்த விவகாரம் தொடர்பாக, மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் என்பவர், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மீது செலுத்திய ஆதிக்கம் குறித்து வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மாவட்ட ஆட்சியராக எவர் வந்தாலும், அதிகாலையில் கார்த்திகேயன் விளையாடும் இடத்திற்கு சென்று, அவர் விளையாடி முடிக்கும் வரை காத்திருந்து வணக்கம் செலுத்தி விட்டு வந்து தான் வழக்கமான பணிகளைத் தொடங்க முடியும் என்பது எழுதப் படாத விதி என்று கூறப்படுகிறது. காவல்துறை உள்ளிட்ட எந்த துறை அதிகாரியாக இருந்தாலும் வசந்தம் கார்த்திகேயனுக்கு வணக்கம் செலுத்தத் தவறினால் அவர் இடமாற்றம் செய்யப்படுவது கட்டாயமாம். அவரது ஆதரவு சாராய வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் துணிந்த காவல்துறை அதிகாரிகள் பலரும் பந்தாடப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அறிவிக்கப்படாத முதல்வராகவே செயல்பட்டு வந்த வசந்தம் கார்த்திகேயனும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியனும் தான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய வணிகர்களின் பாதுகாவலர்கள் என்று கூறப்படுகிறது.” என கூறி இருந்தார்.
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித அன்புமணி ராமதாஸ், ”கல்வராயன்மலையில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விற்கப்படுகிறது. அதற்கு காரணமானவர்களை காவல்துறையினர் கைது செய்தாலும் கூட, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள எ.வ.வேலுவின் ஆதரவாளரான ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் உள்ளிட்டோர் தலையிட்டு அவர்களை விடுதலை செய்ய வைக்கின்றனர்.” என குற்றம்சாட்டி இருந்தார்.
திமுக எம்.எல்.ஏக்கள் நோட்டீஸ்
இந்த நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மன்னிப்பு கேட்க கோரி சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ டி. உதயசூரியன், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
மருத்துவர் ராமதாஸ் அவர்களும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் இந்த நோட்டீஸைப் பெற்றுக்கொண்ட 24 மணி நேரத்துக்குள், ஏதேனும் ஒரு முன்னணித் தமிழ், ஆங்கில நாளேட்டின் ஒரு பதிப்பின் வாயிலாகவும் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களின் வாயிலாகவும் தங்களிடமும் கள்ளக்குறிச்சி மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்; தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குத் தலா ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும்; இந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்றோ வேறு வகையிலோ பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.