Ponmudy Case: ஜெயலலிதா, பாலகிருஷ்ண ரெட்டி வரிசையில் பொன்முடி..தீர்ப்புகள் சொல்வது என்ன?
Dec 21, 2023, 01:56 PM IST
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி வரிசையில் அமைச்சராக இருந்தபோதே பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், பொன்முடி மீதான குற்றச்சாட்டை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் பொன்முடி, அமைச்சர் பதவியையும் எம்எல்ஏ பதவியையும் இழந்துள்ளாா். இதன் மூலம், பதவியில் இருக்கும் போதே சிறை தண்டனை விதிக்கப்பட்டு அரசு பதவியை இழந்தவர்கள் வரிசையில் 3-வது நபராக பொன்முடி இணைந்துள்ளாா்.
இதற்கு முன்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் பதவி இழந்துள்ளனர். 2014-ல் சொத்துக்குவிப்பு வழக்கில் அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு கலவர வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா, பாலகிருஷ்ண ரெட்டி வரிசையில் அமைச்சராக இருந்தேபோதே தற்போது பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொன்முடி மீதான உயர்நீதிமன்றத்தின் தண்டனை விவரங்கள் சட்டப்பேரவை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி பொன்முடியின் தகுதியிழப்பு அறிவிப்பாணையை சட்டப்பேரவை செயலகம் வெளியிடும். சட்டப்பேரவை செயலகத்தின் அறிவிப்பாணை தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு தகுதியிழப்பு நடைபெறும். இதன்பின் பொன்முடி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8(3)-வது பிரிவின் கீழ், ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், சிறை தண்டனை காலத்திலும், அதற்கு பிறகு 6 ஆண்டு காலத்துக்கும் தேர்தலில் போட்டியிட தகுதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்