தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk Vs Admk: ’மத்திய அரசுக்கு திமுக ஜால்ரா போடுகின்றது!’ அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சரமாரி குற்றச்சாட்டு!

DMK VS ADMK: ’மத்திய அரசுக்கு திமுக ஜால்ரா போடுகின்றது!’ அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சரமாரி குற்றச்சாட்டு!

Kathiravan V HT Tamil

Aug 01, 2024, 06:15 PM IST

google News
பெரும் தொழிலதிபர் ஒருவர் முதலமைச்சர் மருமகனை சந்தித்து விட்டு போவதன் காரணம் என்ன? என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி
பெரும் தொழிலதிபர் ஒருவர் முதலமைச்சர் மருமகனை சந்தித்து விட்டு போவதன் காரணம் என்ன? என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

பெரும் தொழிலதிபர் ஒருவர் முதலமைச்சர் மருமகனை சந்தித்து விட்டு போவதன் காரணம் என்ன? என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

மத்திய அரசுக்கு திமுக அரசு ஜால்ரா போடுவதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று வட சென்னை தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதில் வட சென்னை தொகுதி பொறுப்பாளரும், மாவட்ட கழகச் செயலாளருமான டி.ஜெயக்குமார், வட சென்னை தொகுதி கழக வேட்பாளர் ராயபுரம் ஆர்.மனோ, மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

டி.ஜெயக்குமார் பேட்டி

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது, ஆலோசனை கூட்டத்தில், 2026 பொதுத்தேர்தலில் ஆக்கப்பூர்வமாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற கருத்துக்கள் சொல்லப்பட்டன என்றும், மீண்டும் எம்ஜிஆர் மற்றும் அம்மா அவர்களின் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் அறிவுரைகள் வழங்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட பல நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், தற்போதைய திமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதையும் மக்களிடையே கொண்டு செல்ல அறிவுறுத்தியதாக கூறினார்.

மத்திய அரசுக்கு ஜால்ரா

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல நல்ல‌ திட்டங்களை உதாரணமாக தாலிக்கு தங்கம், மடிக்கணினி போன்ற திட்டங்களை இந்த விடியா திமுக அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து நிறுத்தி வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை எனவும், இந்த விடியா திமுக அரசு அதைக் கேட்க தவறிவிட்டது எனவும், மேலும் திமுக மத்திய அரசுக்கு ஜால்ரா போடும் வகையில் செயல்படுகிறது எனவும் அவர் விமர்சித்தார்.

தொழிலதிபர் சபரிசனை சந்தித்தது ஏன்?

பெரும் தொழிலதிபர் ஒருவர் முதலமைச்சர் மருமகனை சந்தித்து விட்டு போவதன் காரணம் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்று முதலமைச்சர் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்க வேண்டும். அங்கு சென்று தான் புறக்கணித்து இருக்க வேண்டும் என்றும், மத்திய அரசு ஒரு சார்பு தன்மையாக செயல்படுகிறது என்பதை கூட்டத்தில் பங்கேற்று பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

போதை பொருள் கடத்தல் அதிகரித்துவிட்டது

மேலும், அதிமுக ஆட்சியில் 10 - 15% குற்ற சம்பவங்கள் இருந்தால், திமுக ஆட்சியில் 100% சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கிறது என்று குற்றம் சாட்டிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ஜாஃபர் சாதிக், போஸ், ரசூல், பாபு, மகாலிங்கம் என, திமுகவினர் பலர் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று ஆதாரத்துடன் தெரிவித்தார்.

மேலும் ஒரே மாதத்தில் தமிழகத்தில் 8 அரசியல் கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், திமுக ஆட்சியில் அரசியல் படுகொலை, ஆணவ படுகொலைகள் அதிகமாகி விட்டதாகவும், உளவு துறையை வைத்துள்ள திமுக அரசுக்கு இவ்வளவு தவறு நடப்பது தெரியாதா? இவற்றையெல்லாம் விசாரிக்க திமுக அரசு தவறி விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

திமுக கூட்டணி உடையும்

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருக்கிறது. அதனால் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியேறிவிடும். இப்போதே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இடம் கேட்டும், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி பிடிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். அவர்களெல்லாம் கூட்டணியை விட்டு வெளியேற வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.

மேலும், தேர்தலுக்கு நாள் நெருங்க நெருங்க அந்த கூட்டணியில் விரிசல் ஏற்படுகிறது என்றும், திமுக கூட்டணியில் இருந்து பிரிந்தால், அவர்கள் அண்ணா திமுகவுக்கு தான் வருவார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி