கருணாநிதி முதன்முதலாக ‘முதல்வராக’ சட்டமன்றத்தை அலங்கரித்த நாள் இன்று!
Feb 10, 2023, 05:51 AM IST
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் ஆளுமையாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய மறைந்த கருணாநிதி, முதன்முதலாக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட நாள் இன்று!
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் ஆளுமையாக அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக கோலோச்சியவர் கருணாநிதி. தமிழ்நாடு முதல்வராக 5 முறை பதவி வகித்த கருணாநிதி, தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ஆம் ஆண்டு ஜூன் 3-ல் முத்துவேலர்- அஞ்சுகம் அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். வளர்த்தெடுத்த ஊர் திருக்குவளை என்றாலும், கருணாநிதியை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்த ஊர் திருவாரூர். பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிகம் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார்.
திராவிட இயக்கத்தினரால் ‘அஞ்சா நெஞ்சன்’ என்று கொண்டாடப்பட்ட பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14ஆவது வயதில் சமூக இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தை காட்டினார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தமிழகத்தில் தலைமை தாங்கி நடத்தினார். 1957 ஆம் ஆண்டு திமுக சார்பில் குளித்தலையில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாநிதி முதல் முதலாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். 1967-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக முதல் முறையாக தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. அதையடுத்து அப்போதைய திமுக தலைவரான அண்ணாதுரை 1967ஆம் ஆண்டு மார்ச் 6-ல் முதல்வராக பதவி ஏற்றார்.
இரண்டு ஆண்டுகள் அண்ணா ஆட்சி செய்த நிலையில் உடல்நலக்குறைவால், 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி மறைந்தார். அதைத்தொடர்ந்து, அப்போதைய நிதி அமைச்சர் வி.ஆர்.நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வராக பதவி வகித்தார். அதைத்தொடர்ந்து கருணாநிதியை கட்சி தலைவராக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்ததால், 1967ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக முதன்முறையாக கருணாநிதி பதவி ஏற்றார்.
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் ஆளுமையாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி இருந்த மறைந்த கருணாநிதி முதன்முதலாக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட நாள் இன்று பிப் (10).
கடின உழைப்பாளி கருணாநிதி. ஒரு நாளைக்கு அவர் எத்தனை மணி நேரம் தூங்குகிறார் என்பதை யாராவது அவருக்குத் தெரியாமல் பார்த்தால் தான் இந்தத் திறமையை அவர் பெற்றதன் அடிப்படை உழைப்பு என்பதை உணர்வீர்கள். என்னை முழுவதும் அறிந்தவர்கள்தான் கழகத்திலே இருக்கிறார்கள். அதிலே முற்றிலும் அறிந்தவர் என்று சொல்லத் தக்கவர்களிலே கருணாநிதிக்கு மிகச் சிறந்த இடம் உண்டு. கருணாநிதிக்கு ஈடு கருணாநிதிதான் என்று மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா குறிப்பிட்டுள்ளார்.
டாபிக்ஸ்