Election 2024: திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு..மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டி?
Feb 24, 2024, 07:37 PM IST
Lok Sabha Election 2024: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட், விசிக, கொங்கு மக்கள் தேசிய கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ள நிலையில், யாருக்கு எந்தெந்த தொகுதி என்பது மட்டும் உறுதி செய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்.24) மாலை நடைபெற்றது. இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் இடையே தொகுதி உடன்பாட்டில் கையெழுத்தானது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திமுக - இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இன்று (பிப்.24) தொகுதி உடன்பாடுகள் குறித்து திமுகவும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் கலந்து பேசியதில் திமுக கூட்டணியில் - இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அத்தொகுதியின் எம்.பி யாக நவாஸ் கனியே மீண்டும் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் எனவும் மீண்டும் நவாஸ் கனியே வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்