Vijayakanth : திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து!
May 08, 2023, 04:03 PM IST
600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ள திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் 3,324 மையங்களில் கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் மொத்தம் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதேபோல் விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். அத்துடன் பிளஸ் 2 தேர்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் 4.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ்,ஆங்கிலம் கணினி பயன்பாடு, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மொத்த மதிப்பெண் 600 க்கு 600 மதிப்பெண் வாங்கியுள்ளார். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடமும் தமிழகத்தில் முதலிடமும் பெற்றுள்ளார்.
600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ள மாணவி நந்தினிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுக்குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும், வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வாழ்த்துகிறேன். மேலும் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் தோல்வியை கண்டு துவண்டு விடாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.
தோல்வி வெற்றியின் ஒரு பங்குகென கருதி தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டால் வெற்றி கிடைத்தே தீரும். ஆகையால் எந்த விதத்திலும் முயற்சிகளை கைவிடாமல் கடின முயற்சி செய்து படித்து மறுதேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்