தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tiruchendur: திடீரென 200 அடிக்கு உள்வாங்கிய கடல்; திருச்செந்தூரில் பரபரப்பு!

Tiruchendur: திடீரென 200 அடிக்கு உள்வாங்கிய கடல்; திருச்செந்தூரில் பரபரப்பு!

Karthikeyan S HT Tamil

Apr 09, 2023, 02:55 PM IST

google News
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கடல் நீர் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கடல் நீர் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கடல் நீர் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் அழைக்கப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். முருகன் கோயில் அனைத்தும் மலை மீது இருக்கும் நிலையில், கடலுக்கு அருகில் உள்ள தலம் என்பதால் இந்த கோயிலுக்கு என்று தனி சிறப்பு உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்குள்ள கடற்கரையில் நீராடி முருகனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்ய வருவது வழக்கம். அந்த வகையில் இன்று விடுமுறை தினம் என்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தது. அவர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில், இன்று திருச்செந்தூரில் திடீரென கடல் சுமார் 200 மீட்டர் தூரம் உள்வாங்கியதால் கடலில் இருந்த பாறைகள், மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. மேலும் கடலில் அலைகள் இல்லாமல் குளம் போல் காட்சியளித்தது. இதனால் பாறை மீது ஏறி நின்று பக்தர்கள் செல்பி எடுத்து வருகின்றனர்.

ஒவ்வொரு அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களில் இக்கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாகக் காணப்படும். இந்த நாள்களில் சில மணி நேரம் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலை திரும்புவதும் வழக்கம். ஆனால், இன்று திடீரென கடல் உள்வாங்கியது கோயிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் இன்று காலை கடல்நீர் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் குமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் காலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்க்க முடியாமல் போனது. இதனை தொடர்ந்து சில மணிநேரத்தில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. திடீரென கடல் நீர் உள்வாங்கிய சம்பவம் கன்னியாகுமரி சுற்றுலா பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி